லண்டன்: ஐரோப்பாவில் உள்ள பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், போர்ச்சுகல் உள்ளிட்ட நாடுகளில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. வெப்பக்காற்றை மக்கள் தாங்க முடியாமல் அவமதிப்படுகின்றனர். பல நாடுகளில் வெயில் காரணமாக காட்டுத்தீ ஏற்பட்டுள்ளதால் மக்கள் பாதுகாப்பான இடம் நோக்கி இடம்பெயர்ந்து வருகின்றனர்.
பிரிட்டன்
பிரிட்டன் வரலாற்றில் முதல்முறையாக வெப்பநிலை 40 டிகிரி செல்சியசை(104 டிகிரி பாரன்ஹீட்) தாண்டியது. பிரிட்டனின் லின்காயின்ஷைர் பகுதியில் 40.3 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. 33 இடங்களில் அதிகளவு வெப்பம் பதிவாகி முந்தைய சாதனையை தகர்த்தது. ஹீத்ரோ விமான நிலையத்திலும் 40.2 டிகிரி செல்சியசும், கிரிங்லே, புனித ஜேம்ஸ் பார்க், கீவ் கார்டன், நார்தோல்ட் பகுதிகளில் 40 டகிரி செல்சியசை தாண்டி வெயில் பதிவானது.
வெயில் காரணமாக ரயில் பாதைகளில் அதிக சூடானது உள்ளிட்ட காரணங்களினால் சில ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நெருப்பை பற்ற வைக்கும் போதும், சிகரெட்டை அப்புறப்படுத்தும் போது கவனமாக இருக்கும்படி பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
லண்டன் கிழக்குப்பகுதியில் உள்ள தாகென்ஹம் பகுதியில் தீ விபத்தில் அதிக புகையை சுவாசித்த இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடுமையான வெயில் காரணமாக பல நீர்நிலைகள் வற்றி வருகின்றன. அணைகளில் நீர்மட்டம் சரிந்து வருகிறது.
வானிலை மைய அதிகாரி கூறுகையில், பசுமை இல்ல வாயுக்கள் காரணமாக பருவநிலை மாற்றம் ஏற்பட்டதால், 40 டிகிரி செல்சியஸ் பதிவாகி உள்ளது. கார்பன் உமிழ்வு தொடரும் பட்சத்தில் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை இது போன்று வெப்பம் அதிகரிப்பதை பார்க்க வேண்டியிருக்கும் என்றார்.
கடுமையான வெயில் காரணமாக, பல இடங்களில் தீவிபத்து ஏற்பட்டதாக தீயணைப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். லண்டனின் கிழக்குப்பகுதியில் உள்ள வென்னிங்டன்னில், 8 வீடுகள் தீவிபத்தால் சேதமடைந்தன.
பிரான்ஸ்
பிரான்ஸ் நாட்டில் 64 இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகியது. கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத வகையில், அந்நாட்டின் தென் மேற்கு பகுதியில் வனப்பகுதிகள் தீ பிடித்து எரிந்து வருகின்றன. கடந்த 12ம் தேதி முதல் தற்போது வரை, 20,300 ஹெக்டேர் நிலங்கள் மேல் தீ பரவி உள்ளது. இதனால், 37 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடம் நோக்கி வெளியேறினர்.
பெல்ஜியத்தில், டி ஹன் என்ற இடத்தில் வெயில் காரணமாக ரிசார்ட்டில் தீ விபத்து ஏற்பட்டதில் ஏராளமான வாகனங்கள் சேதமடைந்தன. கடந்த சில நாட்களாக வெயில் காரணமாக மக்கள் அவதிப்பட்ட நிலையில், ஒரு சில இடங்களில் 20 முதல் 30 மி.மீ., மழை பதிவாகி உள்ளது.
ஜெர்மனி
ஜெர்மனியின் வடக்கு மற்றும் கிழக்குப்பகுதிகளில் அனல் காற்று வீசி வருகிறது. இதனால் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் டுயிஸ்பர்க் நகரில், அதிகபட்சமாக 39.5 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவானது. நெதர்லாந்தின் மாஸ்ட்ரிச் நகரிலும் அதே அளவு வெப்பம் பதிவாகி உள்ளது.
போர்ச்சுக்கல்லில் வெப்பநிலை படிப்படியாக குறைந்து வருகிறது. இருப்பினும் கடந்த வாரத்தில் மட்டும், அனல் காற்று காரணமாக ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இத்தாலியில் இன்று(ஜூலை 20) முதல் வரும் வெள்ளி வரை வெப்பநிலை 40 முதல் 42 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. பல இடங்களில் காட்டுத்தீ ஏற்பட்டது. டுஸ்கனி பகுதியில் ஏற்பட்ட வனத்தீயை அணைப்பதில் அதிகாரிகள் திணறி வருகின்றனர்.
ஐரோப்பிய நாடுகளில் நிலவும் கடுமையான வெயில் காரணமாக வனப்பகுதிகள் தீப்பற்றி எரிந்து வருகின்றன. காட்டுத்தீ காரணமாக, ஸ்பெயினின் மத்திய மற்றும் வட மேற்கு பகுதிகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.
கிரீசின் ஏதேன்ஸ் நகருக்கு அருகேயுள்ள பென்டெலி மலைப்பகுதியில் சூறைக்காற்று காரணமாக காட்டுத்தீ மளமளவென மற்ற பகுதிகளுக்கும் வேகமாக பரவியது. இதனால், அந்த பகுதியில் வசித்த மக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் உலக வானிலை அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், இன்னும் மோசமான சூழ்நிலை இனி வரும் காலங்களில் தான் பார்க்க போகிறோம். எதிர்காலத்தில் அனல்காற்று சாதாரணமானதாக இருக்கும். இன்னும் கடுமையான சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்