கிழக்கு பிரான்சில் உள்ள டவ்ரெஸ் நகரில் மூன்று சிறார்கள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
செவ்வாய்க்கிழமை இரவு முதல் பிணைக் கைதிகளாக வைத்திருந்த தனது குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேரைக் கொன்றதாகக் கூறப்படும் இளைஞர் ஒருவர் பொலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
கொல்லப்பட்டவர்களில் குறித்த இளைஞரின் தந்தை, வளர்ப்பு தாயார், மற்றும் அவர்களது மூன்று பிள்ளைகள் என தெரிய வந்துள்ளது.
22 வயதேயான அந்த இளைஞன் ஆயுதத்துடன் தமது வீட்டுக்குள் நுழைந்து வீட்டில் இருந்த அனைவரையும் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளான்.
இதில் குறித்த இளைஞரின் தந்தை, வளர்ப்பு தாயார், 17 வயதுடைய சகோதரி, 15 வயதுடைய தம்பி மற்றும் 5 வயதுடைய சகோதரி என மொத்தம் ஐவர் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டனர்.
இதனிடையே, தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த அதிரடிப்படையினர் கண்ட காட்சி அதிர வைத்துள்ளது.
வீடு முழுவதும் இரத்தம் தெறித்து மிக கொடூரமாக காட்சியளித்துள்ளது.
இதனையடுத்து கொலையாளியை அதிரடிப்படையினர் கைது செய்யமுற்படும் போது, அவன் மிக மூர்க்கத்தனமாக அதிகாரிகள் மீது பாய்ந்துள்ளான்.
இதனால் அதிகாரிகள் துப்பாக்கிச்சூடு நடத்தி அவனை சுட்டுக்கொன்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த கோர சம்பவமானது டவ்ரெஸ் பகுதி முழுவதும் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நூற்றுக்கும் மேற்பட்ட பொலிசார் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.
தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், கொலையாளி நீண்ட வாள் ஒன்றையும், ரைஃபிள் துப்பாக்கி ஒன்றையும் பயன்படுத்தி படுகொலை செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.