புதுடெல்லி: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை சிவசேனா அதிருப்தி எம்.பி.க்கள் 12 பேர் சந்தித்துப் பேசியுள்ளனர். அப்போது அவர்கள் தாங்கள் தனி அணியாக செயல்படப் போவதாக தெரிவித்துள்ளனர்.
மகாராஷ்டிராவில் சிவசேனா- காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்த மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசு சமீபத்தில் கவிழ்ந்தது. சிவசேனாவைச் சேர்ந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் பாஜகவுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைத்தனர். அதன்படி சிவசேனா அதிருப்தி அணி தலைவர் ஏக்நாத் ஷிண்டே முதல்வராகவும், பாஜகவைச் சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்வராகவும் கடந்த மாதம் 30-ம் தேதி பதவி ஏற்றனர்.
இதனிடையே சிவசேனா எம்.பி.க்கள் பலரும் ஏக்நாத் ஷிண்டே அணிக்கு தாவ இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் நேற்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை, சிவசேனா அதிருப்தி எம்.பி.க்கள் 12 பேர் சந்தித்து, தங்களது நாடாளுமன்ற சிவசேனா தலைவரை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து சிவசேனாவை சேர்ந்த எம்.பி. ஒருவர் கூறியதாவது: முதல்வர் ஏக்நாத் ஷிண்டே நடத்திய காணொலி கூட்டத்தில் 12 எம்.பி.க்கள் கலந்து கொண்டோம். நாங்கள் மக்களவையில் தனி அணியாக செயல்பட முடிவு செய்துள்ளோம். இது தொடர்பாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை சந்தித்து முறைப்படி கடிதம் கொடுத்துள்ளோம். மக்களவையில் எங்களது குழுவின் தலைவராக மும்பையை சேர்ந்த எம்.பி.யான ராகுல் செவாலே செயல்படுவார். இவ்வாறு அவர் கூறினார்.
12 சிவசேனா எம்.பி.க்கள் தனி அணியாக செயல்பட போவதாக அறிவித்திருப்பது, உத்தவ் தாக்கரேக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.