மகாராஷ்டிரா சிவசேனாவில் பிளவு ஏற்பட்ட நிலையில், பாஜக உதவியுடன் ஆட்சியை பிடித்துள்ளார், சிவசேனாவில் இருந்து எம்.எல்.ஏ.க்களை பிரித்துக்கொண்டு வந்த ஏக்நாத் ஷிண்டே. எனினும் அவரை பொம்மை முதல்வராக்கிவிட்டு பாஜகவை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்வராக்கப்பட்டு அனைத்து அதிகாரங்களும் அவரிடம் கொடுக்கப்பட்டுள்ளது என்கிறார்கள். ஏக்நாத் ஷிண்டே சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்தியதோடு நிற்காமல் எம்.பி.க்கள் மத்தியிலும் பிளவை ஏற்படுத்தி இருக்கிறார் என்பது தான் இப்போதைய தகவல்.
மக்களவையில் சிவசேனாவிற்கு 19 எம்.பி.க்கள் இருக்கின்றனர். அவர்களில் 12 பேர் ஏக்நாத் ஷிண்டேயிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அதோடு அவர்கள் சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் தங்களது அணியை சேர்ந்த ராகுல் ஷெவாலேயே சிவசேனா மக்களவைத் தலைவராக நியமிக்கும்படி கேட்டுக்கொண்டு கடிதம் கொடுத்துள்ளனர். கடிதம் கிடைத்தவுடன் சபாநாயகர் அவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டுள்ளார். இதனை டெல்லியில் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், “சில நாள்களுக்கு முன்பு பாஜக ஆதரவோடு மகாராஷ்டிராவில் ஆட்சியமைத்தோம். இதற்கு மக்கள் மத்தியில் எங்களுக்கு முழு ஆதரவு கிடைத்திருக்கிறது. பிரதமர் மோடி, அமைச்சர் அமித் ஷா முழு ஆதரவு கொடுத்துள்ளனர். உத்தவ் தாக்கரே ஆரம்பத்தில் கடந்த ஆண்டு பாஜகவுடன் கூட்டணி சேருவதாக சொன்னார். ஆனால் அதிலிருந்து பின் வாங்கிவிட்டார்” என்று தெரிவித்தார்.
உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா தரப்பிலும் சபாநாயகரிடம் விநாயக் ராவத் கடிதம் கொடுத்திருக்கிறார். அவர் ராகுல் ஷெவாலேயை சிவசேனா அணித்தலைவராக நியமிக்கக்கூடாது என்று அக்கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார். சிவசேனா தரப்பில் கட்சியின் மக்களவைத் தலைவராக நியமிக்கப்பட்ட விநாயக் ராவத் மற்றும் கொறடா ராஜன் விச்சாரே ஆகியோரை அப்பதவியில் ஏக்நாத் ஷிண்டே தரப்பினர் நீக்கினர். மேலும் நேற்று தேர்தல் கமிஷனையும் அணுகி கட்சியின் சின்னத்தை தங்களுக்கு ஒதுக்கவேண்டும் என்று கோரி மனுக்கொடுத்துள்ளனர். அதிருப்தி எம்.பி.க்கள் 12 பேருக்கும் மத்திய அரசு ஒய் பிரிவு பாதுகாப்பு கொடுத்திருக்கிறதாம்.
பாஜகதான் சிவசேனாவை உடைத்தது
இப்பிரச்னை குறித்து கருத்து தெரிவித்த சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, “பாஜகதான் சிவசேனாவை உடைத்தது. சிவசேனாவை அரசியல் ரீதியாக அழிக்கவேண்டும் என்பதுதான் அவர்களின் நோக்கம். இதற்காக பயப்படமாட்டேன். எதிர்த்து போராட தயாராக இருக்கிறேன். அதிருப்தியாளர்கள் மூலம் சிவசேனாவில் பிளவு ஏற்படவில்லை. பாஜகவால்தான் பிளவு ஏற்பட்டது. என்னிடமிருந்து எத்தனை அம்புகளை எடுத்துச்செல்கிறீர்கள் என்பது முக்கியல்ல. என்னிடம் வில் இருக்கிறது” என்றும் தெரிவித்தார்.
முன்னதாக கட்சி நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டி முக்கிய ஆலோசனை நடத்தினார். இதற்கிடையே இன்று உச்ச நீதிமன்றத்தில் உத்தவ் தாக்கரே மற்றும் ஏக்நாத் ஷிண்டே தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் விசாரணைக்கு வர இருக்கிறது.