புதுடெல்லி: சென்னை வானிலை ஆராய்ச்சி மையத்தில் உள்ள பழுதடைந்த ரேடார் கருவிகளை சீர் செய்வது எப்போது? என்று திமுக எம்பி. தயாநிதி மாறன் ஒன்றிய அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் மேற்பார்வையின் கீழ் பழுது பார்க்க ஒப்படைக்கப்பட்ட சென்னை துறைமுகம் நூற்றாண்டு கட்டிடத்தின் எஸ்-பேண்ட் டாப்ளர் ரேடார் பணிகளின் தற்போதைய நிலை என்ன? என்று ஒன்றிய புவி அறிவியல் துறை அமைச்சகத்திடம் மக்களவையில் எழுத்துப்பூர்வமான பதில்களுக்காக மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் கேள்வி எழுப்பினார்.அதன் விவரம் பின்வருமாறு: * இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் மேற்பார்வையின் கீழ் பழுது பார்க்க ஒப்படைக்கப்பட்ட சென்னை துறைமுகம் நூற்றாண்டு கட்டிடத்தின் எஸ்-பேண்ட் டாப்ளர் ரேடாரின் தற்போதைய பணி நிலவரம் என்ன?* உதிரி பாகங்களை தயாரித்து பொருத்துவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளதா? எனில், அதன் விவரங்களை தெரியப்படுத்தவும்.* இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் டாப்ளர் வானிலை ரேடாரின் பிரச்னைகள் குறித்து ஆய்வு செய்தது தொடர்பான அறிக்கை ஏதேனும் ஒன்றிய அமைச்சகத்திடம் உள்ளனவா? எனில், அதன் விவரங்களை தெரியப்படுத்தவும்.* பிராந்திய வானிலை மையங்களில் உள்ள உட்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கும், சிறந்த உட்கட்டமைப்பை அமைப்பதற்கும் அந்தந்த மாநில அரசுகளுக்கு உதவிடும் வகையில் ஒன்றிய அமைச்சகம் மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன? என்பதை விவரங்களுடன் தெரியப்படுத்தவும். இவ்வாறு எம்பி. தயாநிதி மாறன் கேள்வி எழுப்பியுள்ளார்.