உணவுப் பொருள்கள்மீதான ஜி.எஸ்.டி வரியை ரத்து செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ஜி.எஸ்.டி-யின் 47-வது கூட்டம் மத்திய நிதியமைச்சர் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தி.மு.க அரசின் நிதி அமைச்சரும் கலந்துகொண்டார். அ.தி.மு.க ஆட்சியின்போது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் அரசு சார்பாக ஜெயக்குமார் கலந்துகொண்டார். அப்போது தமிழ்நாட்டின் சார்பாக பல அத்தியாவசியப் பொருள்களுக்கு வாதாடி வரி விலக்கு பெறப்பட்டது. ஒரு சில வரிகளுக்கு வரிக்குறைப்பும் பெறப்பட்டது.
ஆனால், இந்த தி.மு.க அரசு பொறுப்பேற்றதிலிருந்து நடைபெற்ற ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டங்களில் பங்கேற்ற அரசின் நிதி அமைச்சர் மக்களை பாதிக்கக்கூடிய வரி உயர்வுகளுக்கு ஆட்சேபனையோ, எதிர்ப்போ தெரிவிக்காமல் வாயில்லா பூச்சியாக இருந்தது ஏன்? ஆனால், திராவிட மாடல் என்று பீற்றிக்கொள்வதில் எந்தக் குறையும் இல்லை. மத்திய அரசை ஒன்றிய அரசு என்று சிறுமைப்படுத்தி, தாங்கள்தான் வலிமையானவர்கள் என்று கூறிக்கொள்ளும் இந்த ஆட்சியாளர்களின் கையாலாகாத்தனம் இதன் மூலம் வெளிப்படுகிறது.
இந்த ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் நிதியமைச்சர் உணவுப் பொருள்கள்மீது விதிக்கப்பட்ட வரி விதிப்புக்கு எந்த எதிர்ப்பு தெரிவிக்காமல் மௌனம் காத்தது கண்டிக்கத்தக்கது. இதன் மூலம் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள்மீதான அக்கறையின்மையை நன்கு வெளிப்படுத்துகிறது. ஏழை, எளிய நடுத்தர மக்களை பாதிக்கும் உணவுப் பொருள்கள்மீதான இந்த வரியை திரும்பப்பெற வேண்டும் என்று ஜி.எஸ்.டி கவுன்சிலையும், மத்திய அரசையும் கேட்டுக்கொள்கிறேன். மேலும், இந்த வரிவிதிப்பை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று ஜி.எஸ்.டி கவுன்சிலுக்கு, தி.மு.க அரசின் சார்பில் அழுத்தம் தர வேண்டும் என வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்திருக்கிறார்.