புதுடெல்லி :டெல்லியில் நாளை நடைபெறும் காவிரி ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்கவோ, முடிவு எடுக்கவோ கூடாது,’ என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கர்நாடகாவில் உள்ள மேகதாதுவில் காவிரியின் குறுக்கே புதிய அணை கட்டும் கர்நாடகா அரசின் திட்டத்துக்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் பல்வேறு வழக்குகளை தமிழக அரசு தொடர்ந்துள்ளது. இந்த வழக்குகளில் இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும் வரையில், காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது குறித்து எந்த விவாதமும் செய்யக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், ஆணையத்தின் 16வது கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்கும்படி கர்நாடகா அரசு விடுத்த கோரிக்கையை, ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் ஏற்றதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும், உச்ச நீதிமன்றத்திலும் புதிய வழக்கு தொடர்ந்தது. இந்நிலையில், ஆணையத்தின் இந்த 16வது கூட்டம் நாளை காலை டெல்லியில் நடக்கிறது. இதில், தமிழக அரசின் எதிர்ப்பையும் மீறி மேகதாது குறித்து விவாதிக்கப்படும் என ஆணையம் தெரிவித்துள்ளது.இந்நிலையில், தமிழக அரசு தொடர்ந்த வழக்கு நீதிபதிகள் ஏ.எம்.கன்வீல்கர், அபாய் மற்றும் பரிதிவாலா அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோத்தகி, உமாபதி மற்றும் வழக்கறிஞர் குமணன் ஆகியோர், ‘உச்ச நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவின்படி தமிழகத்துக்கான நீர் பங்கீடை கர்நாடக அரசு முறையாக வழங்கவில்லை. மேகதாது குறித்து விவாதிக்க காவிரி ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை. தமிழக அரசின் எதிர்ப்பையும் மீறி, இந்த விவாதத்துக்கு ஆணையத்தின் தலைவர் அனமதி வழங்கியுள்ளார். அதனால், கூட்டத்தில் மேகதாது குறித்து விவாதிக்க தடை விதிக்க வேண்டும்,’ என்று வாதிட்டனர்.கர்நாடகா அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஷியாம் திவான், ‘கர்நாடகாவின் எல்லைக்குள் கட்டப்படும் அணையால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.அதனால், தமிழக அரசின் இந்த வழக்கு தேவையற்றது. மேலும், மேகதாது குறித்த திட்ட வரையறை (டிஐபிஆர்) பணிகளை தற்போது வரையில் தொடங்கவில்லை. அதனால்தான் மேகதாது குறித்து ஆணைய கூட்டத்தில் விவாதிக்க வேண்டும் என கர்நாடகா அரசு வலியுறுத்துகிறது,’ என தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘இந்த வழக்கில் காவிரி ஆணையத்தின் கருத்தை நீதிமன்றம் அறிந்து கொள்ள விரும்புகிறது. அதனால், ஆணையம் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பிக்கப்படுகிறது,’ என உத்தரவிட்டு, 26ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தனர். அப்போது குறுக்கிட்ட மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, ‘வரும் வெள்ளிக்கிழமை (நாளை) நடக்கும் காவிரி ஆணைய கூட்டத்தில் மேகதாது குறித்து விவாதிக்கக் கூடாது,’ என தெரிவித்தார். அதை ஏற்பதாக தெரிவித்த நீதிபதிகள், ‘காவிரி ஆணைய கூட்டத்தில் மேகதாது குறித்து எந்த விவாதமும் நடத்தக் கூடாது. அது தொடர்பாக எந்த முடிவையும் எடுக்கக் கூடாது. இத்தனை நாட்கள் இருந்து விட்ட நிலையில், இந்த ஒரு வாரத்தில் மேகதாது குறித்து விவாதிக்காவிட்டால் ஒன்றும் ஆகிவிடாது,’ என கூறினர்.*எங்கள் பக்கம் நியாயம் இருப்பதை உச்ச நீதிமன்ற தீர்ப்பு காட்டுகிறது: துரைமுருகன் பேட்டிஉச்ச நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு டெல்லியில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அளித்த பேட்டியில், ‘ எங்கள் பக்கம் நியாயம் உள்ளது என்பதை தெரிந்து கொண்டுதான் உச்ச நீதிமன்றம் மேகதாது குறித்து விவாதிக்க தடை விதித்துள்ளது. காவிரி நடுவர் மன்றத்திலோ, உச்ச நீதிமன்ற தீர்ப்பிலோ மேகதாது குறித்து எந்த விஷயமும் குறிப்பிடப்படவில்லை. ஆனால், கர்நாடக அரசு ஒரு வழக்கறிஞரின் கருத்தை பெற்று மேகதாது விவகாரத்தை காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் விவாதிக்கலாம் என கூறியது. ஆனால், அதற்கு அனுமதி வழங்க வேண்டியது உச்ச நீதிமன்றம்தான். அந்த வகையில், உச்ச நீதிமன்றம் இந்த தடையை விதித்துள்ளது. இதனால், காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அதிகாரிகள் பங்கேற்பார்கள். ஒன்றிய நீர்வள ஆணையமும், காவிரி நீர் மேலாண்மை ஆணையமும் ஒன்றிய அரசின் ஏஜென்ட் போல் செயல்படுகின்றன. இவை முறையாக செயல்பட்டு இருந்தால், தமிழக அரசு நீதிமன்றத்தை நாடவேண்டிய அவசியம் ஏற்பட்டு இருக்காது,’ என தெரிவித்தார்.
