புதுடெல்லி: கடந்த ஞாயிற்றுக்கிழமை முடிந்த நீட் தேர்வில் ஒருசிலர் ஆள்மாறாட்டம் செய்ததாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக டெல்லி, ஹரியாணாவில் 8 பேரை சிபிஐ கைது செய்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான, மத்திய அரசின் நீட் நுழைவுத் தேர்வு கடந்த 17-ல் நடைபெற்றது. இதில் முறைகேடு நடைபெறுவதைத் தடுக்க கடுமையான சோதனைகளும், முன் எச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. இதையும் மீறி டெல்லி மற்றும் ஹரியாணாவில் ஒருசிலர் ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வை எழுதியுள்ளனர். இவர்களை சிபிஐ பொறிவைத்து நேற்று பிடித்துள்ளது.
டெல்லியைச் சேர்ந்தவர்களான இந்த மாணவர்கள், நீட் எழுத விண்ணப்பிக்கப்பட்ட நாளில் இருந்தே ஆள்மாறாட்டம் செய்யும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர். விண்ணப்பதாரர்களின் புகைப்படங்கள் மற்றும் அடையாள அட்டைகளை ‘போட்டோஷாப்’ செயலியால் மாற்றியுள்ளனர். இதில், தேர்வாளர்களுக்கு பதிலாக ஆள்மாறாட்டம் செய்யும் நபரின் புகைப்படம் இடம்பெறச் செய்துள்ளனர். இவர் நீட் தேர்வு எழுதி சிறந்த கல்லூரிகளில் இடம்பெறும் அளவுக்கு அதிக மதிப்பெண் பெறுவதில் வல்லவராக இருந்துள்ளார். இதற்காக, மிக அதிகமான தொகை கைமாறியதாக சிபிஐ வட்டாரம் கூறியுள்ளது.
இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் சிபிஐ வட்டாரங்கள் கூறும்போது, “நீட் தேர்வு எழுதுவதற்கு முன்பாகவே அதை நடத்தும் தேசிய தேர்வு முகமை (என்டிஏ) எங்களிடம் சந்தேகத்தின் பேரில் புகார் அளித்திருந்தது. எங்களுக்கு கிடைத்த பட்டியலில் நாம் விசாரித்து வலைவிரித்ததில் 8 பேர் சிக்கியுள்ளனர். இதில், தாங்கள் தொகை பெற்ற மாணவரிடமிருந்து லாக் இன், பாஸ்வேர்ட் பெற்று தமக்கு உகந்த வகையில் மாற்றங்களும் செய்துள்ளனர். கைதானவர்களில் ஒருவர் ஆள்மாறாட்டம் செய்யப்பட்டதில் மிகவும் முக்கியமானவர்” என்றன.
நீட் தேர்வு நடந்த அன்றே இந்த வழக்கில் 11 குற்றவாளிகள் பெயரை சிபிஐ பதிவு செய்துள்ளது. இதில், சுசில் ரஞ்சன், பிரிஜ் மோஹன் சிங், பப்பு, உமா சங்கர் குப்தா, நிதி, கிருஷ்ண சங்கர் யோகி, சன்னி ரஞ்சன், ரகுநந்தன், ஜீப்பு லால், ஹேமேந்திரா மற்றும் பரத் சிங் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் டெல்லி மற்றும் ஹரியாணாவிலிருந்து 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வழக்கின் மீது மேலும் விசாரணையும், கைது படலமும் தொடர்கிறது.
இதனிடையே, கேரளாவின் கொல்லம் நகரிலுள்ள சாடாமங்கலத்தின் மார்த்தோமா இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி மீது புகார் கிளம்பியுள்ளது. இங்கு தேர்வு எழுத வந்த மாணவிகளில் சுமார் 100 பேரின் உள்ளாடைகளை கழற்றி சோதனை செய்ததாகக் கூறப்படுகிறது. இதில் பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர் கொல்லம் போலீஸாரிடம் புகார் செய்துள்ளனர்.
மாணவிகள் அணிந்திருந்த உள்ளாடையின் இரும்பிலான கொக்கி மின்னணு சோதனையின்போது, ‘பீப்’ எச்சரிக்கை மணி அடித்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால், தங்கள் உள்ளாடைகளை தேர்வு மையத்தின் பாதுகாப்பு அறையில் கழட்டிவைத்து விட்டு தேர்வு எழுதியுள்ளனர். இதன் காரணமாக பல மாணவிகள் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளனர். இப்பிரச்சினைக்கு தாங்கள் பொறுப்பல்ல என தேர்வு மையத்தினர் கூறியுள்ளனர். கொல்லம் போலீஸாரின் விசாரணை தொடர்கிறது.