தமிழகத்திலுள்ள 582 கோவில் குளங்களின் நிலை என்ன? – இந்து சமய அறநிலையத்துறை பதில்

இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான வேலூர்,  திருநெல்வேலி மாவட்ட இணை ஆணையர்களுக்கு உட்பட்ட 582 கோவில்களில் 380 கோவில் குளங்கள் நல்ல நிலையில் உள்ளன எனவும் 202 கோவில்களின் குளங்கள் புதுப்பிக்கப்பட வேண்டியது உள்ளது.

மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், “இந்தியாவில் பல கோவில்கள் உள்ளன. ஒவ்வொரு கோவிலும் தனக்கே உரிய சிறப்பை கொண்டுள்ளது. தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் 38 ஆயிரத்து 615 கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களுக்கு என 4.22 லட்சம் ஏக்கர் நிலங்களும், 22,600 கட்டிடங்களும், பல கோடி மதிப்பிலான தங்கம் வைர நகைகளும் உள்ளன. இந்த கோவில்களில் இருக்கக்கூடிய குளங்களை முறையாக பராமரிக்கவும், அவற்றை புதுப்பித்து மழைநீரை சேமிக்கும் வகையில் மறுகட்டமைப்பு செய்யவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

image
அதோடு குப்பை மற்றும் சாக்கடை கழிவுகள் கோவில் குளத்தில் சேராத வண்ணம் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதுதொடர்பாக நடவடிக்கை கோரி அதிகாரிகளிடம் மனு அளித்த நிலையில், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகவே தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில் குளங்களிலும் குப்பை மற்றும் சாக்கடை நீர் கலப்பதை தடுக்கவும், மீறுவோர் மீது அதிக அபராதம் விதிப்பது, தண்டனை வழங்குவது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்கவும், கோவில் குளங்களை முறையாக தூர்வாரி பராமரிக்கவும் உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.

இந்த வழக்கில் முந்தைய விசாரணையில், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பிறப்பித்த வழிகாட்டல்கள் அடிப்படையில் கோவில் குளங்களை சீரமைப்பது, பராமரிப்பது போன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஹேமலதா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்து அறநிலையத்துறை தரப்பில், தமிழகத்தில், இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான வேலூர்,   திருநெல்வேலி மாவட்ட இணை ஆணையர்களுக்கு உட்பட்ட கோவில் குளங்களின் நிலை குறித்து பதில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

image
அதில், தற்பொழுது 582 கோவில்களின் குளங்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் 380 கோவில் குளங்கள் நல்ல நிலையில் உள்ளது. 202 கோவில்களின் குளங்கள் புதுப்பிக்கப்பட வேண்டியது உள்ளது  என முதல் கட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மற்ற இணை ஆணையர்களுக்கு உட்பட்ட கோவில்குளங்களின் நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதிகள், வழக்கு குறித்து நிலை அறிக்கையை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் 4 வாரத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கினை ஒத்தி வைத்தார்.

இதையும் படிக்கலாம்: வனப்பகுதியில் துப்பாக்கி ஏந்திய அதிரடிப்படை பாதுகாப்புடன் ஜாக்கிங் சென்ற அமைச்சர்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.