திருச்சி மத்திய சிறை மற்றும் பொன்மலையில் உள்ள ஒருவரின் வீடு என திருச்சியில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் இன்று அதிரடி ரெய்டில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவுகின்றது.
இதுகுறித்த விபரம் வருமாறு;திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள வெளிநாட்டைச் சேர்ந்தவர்களுக்கான சிறப்பு முகாமில் இன்று அதிகாலை முதல் தேசிய புலனாய்வு முகமையைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட அதிகாரிகள் முகாமிட்டு தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மத்திய சிறைச்சாலையில் 1,500-க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சிறைச்சாலையின் உள்ளேயே வெளிநாட்டைச் சேர்ந்தவர்களுக்கான சிறப்பு முகாம் செயல்பட்டு வருகிறது. இம்முகாமில் போலி பாஸ்போர்ட், குற்ற வழக்குகளில் தொடர்புடைய வெளிநாட்டினர், இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர்கள், இந்தோனேஷியா, தாய்லாந்து உட்பட பல்வேறு நாடுகளில் சேர்ந்த குற்றச் செயல்களில் ஈடுபட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் வழக்கு முடிந்த பின்னரும் தங்களை சட்ட விரோதமாக அடைத்து வைத்துள்ளதாகக்கூறி விசாரணைக் கைதிகள் தொடர் உண்ணாவிரதம், மரங்களில் ஏறி தற்கொலை மிரட்டல், தீக்குளிப்பு, கையை பிளேடால் கிழித்து தற்கொலை முயற்சி என தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
தீக்குளிப்பு சம்பவத்திற்கு பிறகு முகாமில் ஆய்வு நடத்திய சிறைத்துறை நிர்வாகம் மற்றும் தமிழக அரசின் சிறப்பு பிரதிநிதிகள் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து விசாரணைக் கைதிகளின் பிண்ணனிகள் குறித்தும் ஆய்வு நடத்தியதில் குற்றப்பிண்ணனி இல்லாத 16 இலங்கை தமிழர்களை முகாம் சிறையில் இருந்து மாவட்ட நிர்வாகம் விடுவித்தது. ஆனால் அவர்கள் இந்தியாவிலேயே தங்கி இருந்து வழக்கு விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டது.
இதற்கிடையே தமிழகத்திலிருந்து போலி பாஸ்போர்ட் மூலம் இலங்கை தமிழர்கள் வெளிநாடுகளுக்கு தப்பி சென்று விட்டதாக புகார் எழுந்துள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு கோவை செம்பட்டி காலனியில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தமிழ்நாட்டில் போலி பாஸ்போர்ட் ஊழல் நடந்திருக்கிறது. இது தொடர்பாக வருகிற 21-ம் தேதி ஆதாரத்துடன் ஆளுநரை சந்தித்து புகார் அளிக்க இருக்கின்றேன். போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த நிலையில் இன்று என்.ஐ.ஏ. அமைப்பை (தேசிய புலனாய்வு முகமை) சேர்ந்த மத்திய அரசின் 60-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் திருச்சி மத்திய சிறையிலும், சிறை முகாமிலும் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் திருச்சி மத்திய சிறை அதிகாரிகள், திருச்சி மாநகர போலீசாருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
என்.ஐ.ஏ. அதிகாரிகள் கார்களில் மத்திய சிறைக்கு வந்தனர். பின்னர் அவர்கள் முகாம் வாசலை உள்பக்கமாக பூட்டிக்கொண்டு ஆய்வு மற்றும் சோதனையில் ஈடுபட்டனர். இன்று அதிகாலை 5 மணிக்கு இந்த திடீர் சோதனை தொடங்கியது.
இதற்கிடையே மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டிருந்தார். சிறை முகாம் வாசலில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது; டெல்லியில் நடந்த குற்ற வழக்கில் சம்பந்தப்பட்ட நபர்கள் இந்த முகாம் சிறையில் உள்ளனர். அவர்கள் இலங்கைத் தமிழர்களா? அல்லது வேறு நாட்டைச் சேர்ந்தவர்களா? எனத் தெரியவில்லை.
இன்று அதிகாலை 5 மணிக்கு என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணையை தொடங்கி இருக்கிறார்கள். இந்தக் குழு எஸ்.பி. தர்மராஜ் தலைமையில் வந்துள்ளது. இதில் 15 முதல் 20 போலீசார் இருப்பார்கள். இன்று காலை அவர்கள் எனக்குத் தகவல் தெரிவித்துவிட்டு தான் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். விசாரணை முடிந்த பின்னர் அது தொடர்பான விவரங்கள் தெரியப்படுத்தப்படும் என கூறிவிட்டு சென்றார்.
போலி பாஸ்போர்ட் மூலம் திருச்சியில் இருந்து யாராவது வெளிநாடுகளுக்கு தப்பி சென்றிருக்கிறார்களா? குற்ற வழக்குகளில் தொடர்புடைய இலங்கை தமிழர்களை விடுவித்ததில் ஏதேனும் சிக்கல்கள் இருக்கிறதா? என்று விசாரிப்பதாக தெரிகிறது. திருச்சி மாநகர போலீஸாருக்குகூட தகவல் தெரிவிக்காமல் அதிரடியாக தேசிய புலனாய்வு அதிகாரிகள் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் சோதனையில் ஈடுபட்டு வருவது பரபரப்பை உண்டாக்கியிருக்கும் நிலையில், இந்த சோதனையால் தமிழகம் முழுவதும் உள்ள சிறைச்சாலை அதிகாரிகளும் விழித்துக்கொண்டுள்ளனர்.
இந்தநிலையில், திருச்சி பொன்மலை மலையடிவாரம் பகுதியில் உள்ள விக்னேஷ் என்பவரின் வீட்டிற்கு திடீரென விசிட் செய்த என்.ஐ.ஏ., அதிகாரிகளால் அந்தப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 5-க்கும் மேற்பட்ட வாகனங்களில் மத்திய பாதுகாப்புப்படை போலீஸார் துப்பாக்கிகளுடன் தெருவுக்குள் சென்றதால் அந்தப்பகுதியில் வசிப்போர் ஏதும் புரியாமல் ஒருவித அச்சத்துடன் ஒதுங்கினர்.
பொன்மலை மலையடிவாரம் பகுதியில் உள்ள விக்னேஷ் என்பவர் திருச்சி மத்திய சிறையில் இருந்த குணா என்ற கைதிக்கு விசா மற்றும் பாஸ்போர்ட் உள்ளிட்ட பல்வேறு வகையில் உதவி செய்ததாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அவரது வீட்டை என்.ஐ.ஏ., அதிகாரிகள் அதிரடி சோதனையிட்டனர்.
திருச்சியில் ஒரே நேரத்தில் 60-க்கும் மேற்பட்ட என்.ஐ.ஏ., அதிகாரிகள் அதிரடி சோதனை செய்வது இதுவே முதன்முறை என்பதால் மாவட்ட நிர்வாகம், காவல்துறை வட்டாரத்திலும் ஒருவித பதட்டமான சூழலே காணப்படுகின்றது.
செய்தி: க.சண்முகவடிவேல்
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil