திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில், போலி பாஸ்போர்ட் வழக்கு உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் கைதுசெய்யப்பட்ட இலங்கை, சூடான், பல்கேரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 140-க்கும் மேற்பட்டோர் உள்ளனர். ‘எங்கள் மீதான வழக்குகள் முடிந்தும் ஏன் சிறப்பு முகாமில் இருந்து எங்களை விடுவிக்க மறுக்கிறீர்கள்!’ என சிறப்பு முகாமில் இருந்த கைதிகள், கடந்த ஒருமாதமாக முகாமினுள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். அதையடுத்து ஜூலை 2-ம் தேதி சிறப்பு முகாமில் இருந்த கைதிகள் 16 பேர் விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், தேசிய பாதுகாப்பு முகமை (என்.ஐ.ஏ) எஸ்.பி தர்மராஜன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட அதிகாரிகள், சி.ஆர்.பி.எஃப் வீரர்களுடன் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் இன்று காலையிலிருந்து கைதிகளிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சிறப்பு முகாமில் இருக்கும் குணா உள்ளிட்ட கைதிகளுடன் தொடர்பில் இருந்த, திருச்சி பொன்மலையில் உள்ள விக்னேஸ்வரன் என்பவரது வீட்டிலும் என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இன்று காலையிலிருந்து திருச்சியில் என்.ஐ.ஏ அதிகாரிகள் நடத்திவரும் இந்த விசாரணை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
என்ன விவகாரம் சம்பந்தமாக என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர் என விஷயமறிந்த அதிகாரிகளிடம் விசாரித்தோம். “2021-ம் ஆண்டு கேரள மாநிலம் விழிஞ்சம் கடற்பகுதியில், 300 கிலோ ஹெராயின் மற்றும் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை கடத்திச் சென்ற படகினை கடலோர காவல்படையினர் பிடித்தனர். இது தொடர்பாக இலங்கையைச் சேர்ந்த 6 பேர் கைதுசெய்யப்பட்டனர். மேலும், இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்தது. அதனடிப்படையில்தான் இன்றைக்கு திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்” என்றனர்.
‘டெல்லி குற்ற வழக்கு சம்பந்தமாக என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிந்த பின்னர் விபரங்கள் தெரிவிக்கப்படும்’ – திருச்சி கலெக்டர் பிரதீப் குமார்
விஷயமறிந்த மேலும் சில அதிகாரிகளோ, “சமீபத்தில் சிறப்பு முகாமிலிருந்து விடுவிக்கப்பட்ட கைதிகள், போலி பாஸ்போர்ட் மூலமாக வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றிருக்கின்றனர். இந்த விவகாரம் சம்பந்தமாகவும், கேரள தங்கக் கடத்தல் வழக்கு சம்பந்தமாகவும் என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்” என்றனர். ஆனால், சிறப்பு முகாமில் என்.ஐ.ஏ அதிகாரிகள் நடத்தி வரும் விசாரணையை நேரில் வந்து பார்வையிட்ட திருச்சி கலெக்டர் பிரதீப் குமார் பத்திரிகையாளர்களைச் சந்திக்கையில், “டெல்லி குற்ற வழக்கு சம்பந்தமாக என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிந்த பின்னர் விபரங்கள் தெரிவிக்கப்படும்” என்றார்.
ஆக, என்.ஐ.ஏ அதிகாரிகளின் விசாரணை தொடர்பாகச் சொல்லப்பட்டு வரும் பல்வேறு தகவல்களில், உண்மையிலேயே என்ன காரணம் என்பது விசாரணை முடிவுக்குப் பின்னர் தான் தெரியவரும்.