நடிகை பலாத்கார வழக்கு திலீப்புக்கு எதிராக குற்றப்பத்திரிகையில் கூடுதல் குற்றப்பிரிவுகளை சேர்க்க முடிவு

திருவனந்தபுரம்: நடிகை பலாத்கார வழக்கில் நடிகர் திலீப்புக்கு எதிராக குற்றப்பத்திரிகையில் கூடுதல் குற்றப்பிரிவுகளை சேர்க்க போலீசார் தீர்மானித்துள்ளனர்.மலையாள நடிகை பலாத்கார வழக்கு கடந்த 5 வருடங்களுக்கு மேலாக நடந்து வருகிறது. தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. தொடர் விசாரணை நடத்தி வழக்கை முடிக்க குற்றப்பிரிவு போலீசார், மேலும் 3 வார அவகாசம் கேட்டபோதிலும் கேரள உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது. வரும் 22ம் தேதி குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து குற்றப்பத்திரிகையை தயாரிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் குற்றப்பத்திரிகையில் திலீப்புக்கு எதிராக கூடுதல் குற்றப்பிரிவுகளை சேர்க்க போலீசார் தீர்மானித்துள்ளனர். அதன்படி அவர் மீது ஆதாரங்களை அழித்தல், சாட்சிகளை தன் வசப்படுத்துதல் ஆகிய குற்றங்கள் சுமத்தப்பட உள்ளது.இதற்கிடையே நடிகை பலாத்கார வழக்கில், அவரது முன்னாள் டிரைவரான பல்சர் சுனி (எ) சுனில்குமார் முதல் நபராக சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த 2017, பிப்ரவரி 17ம் தேதி இரவு கொச்சியில் நடிகை பலாத்கார சம்பவம் நடந்தது. இந்த சம்பவம் நடந்த ஒரு வாரத்திற்குள் பிப்ரவரி 23ம் தேதி, இந்த வழக்கில் முக்கிய நபராக கருதப்பட்ட சுனில்குமார் கைது செய்யப்பட்டார். பின்னர் இவருக்கு உடந்தையாக இருந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் பலாத்காரத்திற்கு பிரபல நடிகர் திலீப் சதித்திட்டம் தீட்டியது தெரியவந்தது. அவரையும் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மொத்தம் 8 பேரில் சுனில் குமார் உட்பட 7 பேரும் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால் இதுவரை இவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. பலமுறை கேரள உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தபோதிலும் தள்ளுபடி செய்யப்பட்டன.இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு, உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் ஜாமீன் வழங்க கோரி உச்சநீதிமன்றத்தில் சுனில்குமார் தாக்கல் செய்த மனுவும் நிராகரிக்கப்பட்டது. ஜாமீன் மனுவை கேரள உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு உச்சநீதிமன்றம் கூறியது. இந்நிலையில் சுனில்குமாரை போலீசார் நேற்றிரவு திருச்சூரில் உள்ள அரசு மன நல மருத்துவமனையில் அனுமதித்தனர். தொடர்ந்து 5 வருடங்களுக்கு மேலாக சிறையில் அடைக்கப்பட்டிருப்பதால் அவர் மன ரீதியாக பாதிக்கப்பட்டிருப்பதால் மனநல மருத்துவமனையில் அனுமதித்ததாக போலீசார் கூறினர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.