புதுடில்லி: மருத்துவப் படிப்புக்கான, ‘நீட்’ நுழைவுத்தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய மோசடி கும்பல் பிடிபட்டுள்ளது.
இது தொடர்பாக, எட்டு பேரை சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர்.எம்.பி.பி.எஸ்., – பி.டி.எஸ்., உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்பில் சேர்வதற்கான, ‘நீட்’ நுழைவுத்தேர்வு 17ல் நடந்தது. இதில், பீஹார், உத்தர பிரதேசம், மஹாராஷ்டிரா, ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது. இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட சி.பி.ஐ., அதிகாரிகள், டில்லியில் எட்டு பேரை நேற்று முன் தினம் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், மாணவர்களுக்கு பதிலாக ஆள்மாற்றாட்டம் செய்து வேறு நபரை வைத்து நீட் தேர்வு எழுதப்பட்ட விபரம் தெரியவந்தது. இதற்கு மாணவர்களிடம் தலா 20 லட்சம் ரூபாய் பேரம் பேசப்பட்டு, 5 லட்சம் ரூபாய் முன்பணமாக பெறப்பட்டுள்ளது தெரியவந்தது.டில்லியின் சப்தர்ஜங் பகுதியை சேர்ந்த சுஷில் ரஞ்சன் என்பவர் இந்த மோசடிக்கு மூளையாக செயல்பட்டது விசாரணையில் தெரியவந்தது.
இந்த மோசடியில் மொத்தம், 11 பேர் ஈடுபட்டுள்ளனர். மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.இந்த முறைகேட்டில் சில பயிற்சி நிறுவனங்களுக்கும் தொடர்புள்ளதாக கூறப்படுகிறது. மாணவர்களிடமும் விசாரணை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement