புதுடெல்லி: நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் மசோதா குறித்து தமிழ்நாடு அரசிடம் விளக்கம் கேட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தமிழக அரசின் நீட் விலக்கு மசோதா தொடர்பான கேள்விக்கு, மக்களவையில் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா கூறியிருப்பதாவது:
நீட் தேர்வில் இருந்து விலக்கு கோருவதற்காக, ‘இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான தமிழ்நாடு மாணவர் சேர்க்கை, 2021’ என்ற பெயரில் மசோதா ஒன்றை தமிழ்நாடு அரசு தயாரித்தது. மத்திய அரசின் பரிசீலனைக்காகவும், குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காகவும், ஆளுநருக்கு அனுப்பப்பட்ட அந்த மசோதாவை மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த மே 2-ம் தேதி பெற்றது. இது குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் மற்றும் துறைகளிடம் ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
தமிழக அரசின் மசோதா குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், ஆயுஷ் அமைச்சகம் ஆகியவை தெரிவித்த கருத்துக்கள் தமிழ்நாடு அரசுடன் கடந்த ஜூன் 21 மற்றும் ஜூன் 27-ம் தேதிகளில் பகிரப்பட்டன. இது குறித்து தமிழக அரசின் கருத்துக்கள் மற்றும் விளக்கங்கள் கோரப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.