புதுடெல்லி: முஸ்லிம்களின் இறைதூதர் நபிகள் நாயகம் தொடர்பாக நுபுர் சர்மா சர்ச்சைக்குரிய வகையில் அவதூறாக பேசியிருந்தார். இது நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனிடையே பாஜகவில் இருந்து நுபுர் சர்மா சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இதைத் தொடர்ந்து அவரை கைது செய்ய கோரி நாட்டின் பல பகுதிகளில் வன்முறைச் சம்பவங்கள் நடந்தன. நுபுர் சர்மாவின் கருத்துகளை ஆதரித்த ஒருவர் ராஜஸ்தானில் பகிரங்கமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். நுபுர் சர்மா மீது பல இடங்களில் வழக்குகள் தொடரப்பட்டன.
இந்நிலையில் தன் மீதான இந்த விமர்சனங்களை நீதிபதிகள் திரும்பப் பெற வேண்டும் என்றும் வழக்குகளை ஒருங்கிணைத்து விசாரிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் நுபுர் சர்மா மனு தாக்கல் செய்தார்.
இந்நிலையில் இந்த வழக்கை நேற்று விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி சூர்யகாந்த், ஆகஸ்ட் 10-ம் தேதி அடுத்த கட்ட விசாரணை நடைபெறும் என்றும், அதுவரை இவ்வழக்கில் நுபுரை கைது செய்யக் கூடாது என்றும் தடை விதித்துள்ளார்.