விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள ராஜபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் பத்மநாபன். இவருடைய நிலத்தை 3 வருடத்திற்கு முன்பு சடகோபன் என்பவர் குத்தகைக்கு பெற்று தொடர்ச்சியாக விவசாயம் செய்து வருகிறார். தற்போது, அந்த நிலத்தில் வேர்கடலை விவசாயம் செய்திருக்கும் சடகோபன், பன்றி தொல்லையில் இருந்து பயிரை காப்பதற்காக நிலத்தை சுற்றி சட்டத்திற்கு புறம்பாக 2 அடி உயரத்தில் காப்பர் கம்பிகளை கொண்டு மின்வேலி அமைத்துள்ளார்.
இந்நிலையில், அருகில் உள்ள வன்னிபேர் கிராமத்தை சேர்ந்த முருகதாஸ், வெங்கடேசன், சுப்பிரமணி ஆகிய மூன்று பேரும் நேற்று (19.07.2022) இரவு அப்பகுதிக்கு முயல் வேட்டைக்கு சென்றதாக கூறப்படுகிறது. அப்போது, எதிர்பாராத விதமாக மின்சார வேலியில் சிக்கிய மூவரும் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த ராஜபாளையம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் சிலர், பிரம்மதேசம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்படி சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், 304 A IPC., மற்றும் 135/1 (tamilnadu electricity act) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.