தமிழ் சினிமா தயாரிப்பாளர்களில் பாதிப்பேர், புதிதாக வரும் இயக்குநர்களிடம் கதைகள் கேட்பதைவிட, அவர்களின் கதைகளை எழுத்து வடிவமாக அதாவது `பவுண்டட் ஸ்கிரிப்ட்’ ஆகவோ அல்லது `கதைச் சுருக்கமாக’வோ கேட்பதைத்தான் விரும்புகிறார்கள். ஒரு கதையை எழுத்தில் புரிய வைக்க முடியாதவர்கள், திரையில் மட்டும் எப்படிப் புரிய வைக்க முடியும் எனத் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, சமீபத்தில் கேட்டிருந்தார். இது குறித்துத் திரையுலகினர் சிலரிடம் பேசினேன்.
‘துப்பாக்கி’, ‘கபாலி’, ‘அசுரன்’, ‘கர்ணன்’ உட்படப் பல வெற்றிப்படங்களைத் தயாரித்த எஸ். தாணுவிடம் இருந்து பேச்சை ஆரம்பித்தேன்.
“எங்களோட வி கிரியேஷன்ஸ் தயாரிச்ச அத்தனை படங்களையும், குறிப்பா புது இயக்குநர்களின் படங்கள் எல்லாத்தையுமே அவங்ககிட்ட கதைகள் கேட்ட பின்னர்தான் படமா பண்ணியிருக்கோம். யார்கிட்டேயும் பவுண்டட் ஸ்கிரிப்ட் கேட்டு வாங்கினதும் இல்ல. அதைப் படிச்சு முடிவு பண்றதுமில்ல. கதைகள் கேட்க தனியா நேரம் ஒதுக்குறேன். ஒன்றரை மணி நேரம் முழுக்கதையும் கேட்ட பின்தான் முடிவு எடுக்கறேன். தொண்ணூறு சதவிகித படங்கள் அப்படிக் கதை கேட்ட படங்கள். எல்லாமே வெற்றியாகியிருக்கு.
நேர்ல கதைகள் கேட்கறப்ப அதுல ஒரு ஜீவன் இருக்கும். அந்த ஜீவன் பேப்பர்ல இருக்காது. அதைப் போல பெரிய இயக்குநர்கள்கிட்ட கதை கேட்க மாட்டேன். அவங்க மீதும் அவங்க படைப்பின் மீதும் முழு நம்பிக்கை வச்சுடுவேன்” என்கிறார் தாணு.
‘மாநகரம்’, ‘கைதி’, ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’ என அதிரி புதிரி ஹிட்டுகள் கொடுத்த லோகேஷும் தனது கருத்தைப் பகிர்கிறார்.
“ஸ்கிரிப்ட் கொடுக்கறதோ அல்லது கதைகள் சொல்றதோ ஒவ்வொருத்தரோட தனிப்பட்ட திறமையாகத்தான் பாக்குறேன். கதை சொல்றதைத்தான் வசதியா உணர்றேன். கதைகள் சொல்றதுலதான் நான் ஸ்டிராங். நான் ரைட்டிங்ல கொடுத்த சில கதைகளை, ‘இது எங்களுக்குப் புரியலைப்பா’ன்னு சொல்லி நிறைய பேர் எங்கிட்ட திரும்பிக் கொடுத்ததும் உண்டு. அதன்பின் அவங்ககிட்ட நான் சொல்லும் போது அது அவங்களுக்குப் பிடிச்சி போயிருக்கு. அதைப் படமா பண்ணின பிறகு ரொம்பப் பிடிச்சிருக்குன்னும் சொல்லியிருக்காங்க. ‘மாநகரம்’ கதையை எஸ்.ஆர்.பிரபு சார் படிச்சிட்டு ‘இந்தக் கதை நல்லா இருக்கு’ன்னு சொன்னாங்க. அவர்கிட்ட சின்னச் சின்ன குறிப்புக்களாகத்தான் கொடுத்தேன். அதன்பின் ரைட்டிங்ல கேட்டாங்க. ‘கைதி’க்கும் அப்படித்தான். நெரேஷன் போச்சு. அதன்பின் ரைட்டிங்ல கொடுத்தேன்.
‘நீங்க பவுண்டட் ஸ்கிரிப்ட் கொடுத்துடுங்க’ன்னு என்னைக் கேட்டால், அவங்ககிட்ட நான் சொல்றது ‘முதல்ல கதையைக் கேட்டுடுங்க’ன்னுதான். என் நண்பர்கள் வட்டத்தில உள்ளவங்க அவங்களோட கதைகளைப் புத்தகமாகத்தான் கொடுக்கறாங்க. அதைப் படிச்சுட்டு நண்பர்களோட கருத்துகளை ஷேர் பண்ணிக்கறோம்” என்கிறார் லோகேஷ் கனகராஜ்.
நிறைவாக எஸ்.ஆர்.பிரபுவிடமும் கேட்டால்… அவரின் பார்வை வேறாக இருக்கிறது.
“ஸ்கிரிப்ட்டைப் படிச்சிட்டு முடிவு பண்றதுதான் உலகம் முழுவதுமான நடைமுறை. அப்பெல்லாம் தயாரிப்பு நிறுவனங்கள் கதாசிரியர்கள், ரைட்டர்கள் கொண்ட கதை இலாகா வச்சிருப்பாங்க. ஒரு கதையை அந்த இலாகாவினர் பேசி உருவாக்கி திரைக்கதையாக்குவாங்க. அந்தக் கதையை ஓர் இயக்குநரை வச்சுப் படமாப் பண்ணுவாங்க. காலப்போக்குல, கதாசிரியர்கள் குழு இல்லாமல் தனி ஒருத்தரே கதையை ரெடி பண்ண ஆரம்பிச்சாங்க. அதாவது ஒருத்தர் ஒன்லைன் மட்டும் சொன்னார்னா, அவருக்கு ஒரு ஆபீஸ் போட்டுக் கொடுத்து அதைக் கதையாக டெவலப் பண்ணச் சொல்வாங்க. அப்புறம் அதுல நிறைய மைனஸ்கள் ஏற்பட்டுச்சு.
வருஷத்துக்கு 300 கதைகள் வருது. மாசத்துக்கு 30 கதைகள்… முன்னாடியெல்லாம் ஒரு கதைக்கு 250 பக்கங்களுக்கு மேல எழுதிட்டு வந்து கொடுப்பாங்க. ‘எதுக்கு இவ்ளோ எழுதியிருக்கீங்க’ன்னு கேட்டால், ‘டீட்டெயில்டு ஸ்க்ரிப்ட்’னு சொல்வாங்க. ஒரு படம் மினிமம் 120 நிமிஷம்னா, ஒரு நிமிஷத்துக்கு ஒரு பக்கம் எழுதினா போதும். மேற்கொண்டு பத்து நிமிஷம் கூடுதல் ஆகலாம். ஒரு ஸ்கிரிப்ட் புக்னா, 120 பக்கத்துல இருக்கணும்னு ஒரு ஃபார்மேட்டுக்கு வந்தோம். நாங்க படிக்கற 300 ஸ்கிரிப்ட்ல மூணே மூணு கதைகள்தான் தேர்வாகுதேன்னு யோசிக்கும் போது, இது மிகப்பெரிய காலவிரயமா ஆகிடுது.
ஒரு ஸ்கிரிப்ட் புக் படிக்கறது என்பது நாலு மணி நேர வேலை. அந்த ஸ்கிர்ப்ட் நல்லா இல்லைங்கறப்ப அந்த ஸ்கிரிப்டைப் படிச்சு முடிக்கறதுக்குள் பெரிய மன உளைச்சல் மட்டுமல்ல, அன்றைய நாளே அப்படி ஒரு மன அழுத்தத்தைக் கொடுத்துடுது. ஆனா சிலருக்கு என்ன தோணும், ‘நாங்க இவ்ளோ முயற்சி பண்ணி ஒரு கதை எழுதுறோம். நீங்க ரெண்டு மணி நேரம் டைம் செலவழிச்சா என்ன குறைஞ்சிடும்’ன்னு கேட்பாங்க. இப்படியெல்லாம் வந்ததாலதான், முழு ஸ்கிரிப்ட்டைக் கொடுக்க வேணாம். மொத்தமே இருபது பக்கத்துக்குள் கதைச் சுருக்கமா (Synopsis) கொடுங்கன்னு கேட்க ஆரம்பிச்சோம். ‘கதைச் சுருக்கம் கொடுத்தா அதை எப்படிப் புரிஞ்சுக்குவீங்க’ன்னு சிலர் கேட்பாங்க. இரண்டரை மணி நேர படத்துக்கு ஒரு டிரெயிலரைக் காண்பிச்சுதானே கூட்டத்தை உள்ளிழுக்கிறோம். இன்னைக்கு காப்பிரைட் சட்டம் எவ்வளவோ இருக்கு. இயக்குநர்கள் நீங்க உங்க பக்கம் காப்பிரைட் பாதுகாப்பு விஷயங்களைச் செய்த பிறகு ஸ்கிப்ட்டைக் கொடுங்க.
நம்ம கதையை எழுத்தா கொடுத்தால், அதை மாத்தி வேற ஒண்ணா பண்ணிடுவாங்கன்னு பயப்படுறவங்கதான், ஸ்கிரிப்ட் கொடுக்கத் தயங்குவாங்க. இன்றைய காப்பிரைட் சட்டப்படி அப்படியெல்லாம் நாம சீன்களை எடுத்துட முடியாது. ஸ்கிரிப்ட் கொடுக்கத் தயங்குறவங்க, நெரேஷனை சொல்றேன்னு வந்து நிற்பாங்க.
எழுதுறதுங்கறது ஒரு பெரிய வேலை. அதுக்கு நேரமும் பொறுமையும் ரொம்ப முக்கியம். இதையும் தாண்டி சில எழுத்துக்கு உதவியாளர்களும், சிற்சில செலவுகளுமேகூட தேவையா அமையும். இந்த மாதிரியான சிக்கல்களால் சிலர் கதைகளை எழுதுறதில்ல. இதுல பாதிப்பேருக்கு ஈகோ இருக்கு. ‘கதையைப் படிச்சா மட்டும் நாம நினைக்கற ஃபீலிங்ஸைப் புரிஞ்சுப்பாங்களா’ன்னு ஈகோவா இருப்பாங்க.
ஒரு தயாரிப்பாளரா, நான் சொல்ல விரும்புறது ஒரு கதையைப் படிக்கும்போது அந்த புராஜெக்ட்ல இருக்கற குழப்பங்கள்ல பாதி தீர்ந்திடும். நெரேஷனா சொல்றப்ப, ‘அந்த இடத்துல கோபமா நடந்து வர்றான்’ன்னு ஒரு வார்த்தையில சொல்லிட்டுப் போயிடலாம். ஆனா, கதையைக் கேட்குறவருக்கு அது அவருடைய கற்பனையில வேற ஒண்ணா எண்ணியிருக்க வாய்ப்பிருக்கும். ஸோ, அந்த சீன் படமாகும் போது, இயக்குநர் சொன்னது ஒண்ணா இருக்கும். அந்தத் தயாரிப்பாளர் நினைச்சது வேறா இருக்கும். அதுவே, அவர் எழுத்தா கொடுத்திருந்தால், இதுதான் வரும்னு நமக்கும் தெரிஞ்சிடும். அதுல எதுவும் மாற்றங்கள் இருந்தால், ஒரு தயாரிப்பாளரா கேள்வி கேட்க முடியும்.
ஒரு முழு ஸ்கிரிப்ட்டா படிக்கும்போது கிட்டத்தட்ட 60 சதவிகித படம் முடிஞ்ச மாதிரி… நடிகர்கள், லொக்கேஷன் போன்ற விஷயங்கள்தான் மீதி சதவிகிதமா இருக்கும். இதற்காகத்தான் ஸ்கிரிப்ட்டைக் கேட்குறோம்! இன்னிக்கு காப்பிரைட் சட்டம் வலுவா இருக்கு. உங்க ஸ்கிரிப்ட்டுக்குப் பாதுகாப்பு இருக்கு. அதனால தைரியமா களத்தில் இறங்கிச் சாதிக்கலாம்” என்கிறார் எஸ்.ஆர்.பிரபு.