உத்தரப்பிரதேச மாநிலத்தின் எதிர்கட்சித்தலைவர் அகிலேஷ் யாதவ், சுதந்திர தினத்தை முன்னிட்டு முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவிப்பு வெளியிட்டதைத்தொடர்ந்து, பா.ஜ.க-வையும் ஆர்.எஸ்.எஸ்-ஸையும் கடுமையாகச் சாடியுள்ளார்.
முன்னதாக யோகி ஆதித்யநாத், ‘ஹர் கர் திரங்கா’ என்ற முழக்கத்துடன் ஆகஸ்ட் 11 முதல் 17 வரை ‘சுதந்திர வாரம்’ கொண்டாடப்படும் என்று அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், இதுதொடர்பாக பா.ஜ.க-வை விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ள அகிலேஷ் யாதவ், “நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் எந்தப் பங்கும் வகிக்காதவர்கள், தற்போது தேசபக்தி என்ற பெயரில் வேலை செய்கிறார்கள். சுதந்திர இயக்கத்துடன் தொலைதூர தொடர்பு கூட இல்லாத அவர்கள், தியாகிகளுக்கு என்ன மரியாதை கொடுப்பார்கள்.
இதில் உண்மையென்னவென்றால், பா.ஜ.க-வும், அதன் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்-ஸும் தேசியக் கொடியை ஒருபோதும் மதிக்கவில்லை. அதுமட்டுமல்லாமல், நாக்பூரிலுள்ள சங்கத்தின் தலைமையகத்தில் தேசியக் கொடி ஏன் ஏற்றப்படவில்லை? இங்கு பா.ஜ.க-வும், ஆர்.எஸ்.எஸ்-ஸும் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் செயலில் ஈடுபட்டுள்ளன. மேலும், அதிகாரப் பசியால் தேசியக் கொடியை அவர்கள் இணைத்துக்கொள்வதை ஏற்றுக்கொள்ள முடியாது” கூறியிருக்கிறார்.
மேலும் இந்த அறிக்கையில், சுதந்திர தினத்திற்கு முந்தைய வாரம் சுதந்திர இயக்கத்தின் நினைவாக அர்ப்பணிக்கப்படும் என்று கூறியுள்ள அகிலேஷ் யாதவ், “தேசிய இயக்கத்தின் அரசியலமைப்பு விழுமியங்கள் மற்றும் இலட்சியங்களைப் பாதுகாத்து நிலைநிறுத்துவதற்கான பொறுப்பு, மீண்டும் சாதாரண குடிமக்கள் மற்றும் சோசலிஸ்டுகள் மீது விழுந்துள்ளது” எனத் தெரிவித்திருக்கிறார்.