திதி என்றதுமே நம்மில் பலருக்கும் முன்னோர் வழிபாடுதான் நினைவுக்கு வரும்.
முன்னோர் ஆராதனைக்கு மட்டுமல்ல பல்வேறு சுபகாரியங்களுக்கும் புதிய முயற்சிகளுக்கும் உரிய திதி பார்த்து செயல்பட்டால் வெற்றி நிச்சயம்; அதிர்ஷ்ட யோகம் கைகூடும் என்று வழிகாட்டுகின்றன ஞான நூல்கள். அந்த வகையில் எந்தெந்த திதிகளில் என்னென்ன செய்யலாம், எந்தக் காரியத்தைத் தொடங்கலாம் என்பது குறித்த வழிகாட்டல் உங்களுக்காக!
பிரதமை: இந்த திதிக்கு அதிதேவதை அக்னி. வளர்பிறை மற்றும் தேய்பிறை பிரதமை தினம் வாஸ்து காரியங்கள் செய்வதற்கு உகந்தது. அக்னி சம்பந்தமான காரியங்களிலும் ஈடுபடலாம்.
மதச் சடங்குகளை மேற்கொள்ளலாம்.
துவிதியை: இந்த திதிக்கு அதிதேவதை பிரம்மன். அரசுக் காரியங்கள் ஆரம்பிக்கலாம். திருமணம் செய்யலாம். ஆடை, அணிமணிகள் அணியலாம். விரதம் இருக்கலாம். தேவதை பிரதிஷ்டை செய்யலாம். கட்டட அடிக்கல் நாட்டலாம்.
திருதியை: இதன் அதிதேவதை கௌரிதேவி. இந்தத் திதிநாளில் குழந்தைக்கு முதன்முதல் அன்னம் ஊட்டலாம். சங்கீதம் கற்க ஆரம்பிக் கலாம். சீமந்தம் செய்யலாம். சிற்ப காரியங்களில் ஈடுபடலாம். சகல சுப காரியங்களுக்கும் உகந்த திதி இது.
சதுர்த்தி: எமதருமனும் விநாயகரும் இந்தத் திதிக்கு அதிதேவதை ஆவார்கள். முற்கால மன்னர்கள் படையெடுப்புக்கு உகந்த நாளாக இதைத் தேர்ந்தெடுப்பார்கள். நெருப்பு சம்பந்தமான காரியங்களைச் செய்ய உகந்த திதி இது. கேது தோஷம் உள்ளவர்கள், இந்தத் திதி நாளில் (சங்கடஹர சதுர்த்தி) விநாயகரை வழிபடுவதன் மூலம் கேது தோஷம் விலகும்.
பஞ்சமி: எல்லா சுப காரியங்களையும் செய்யலாம். விசேஷமான திதி ஆகும் இது. குறிப்பாக சீமந்தம் செய்ய உகந்த திதியாகச் சொல்லப்பட்டிருக்கிறது. மருந்து உட்கொள்ளலாம். ஆபரேஷன் செய்து கொள்ளலாம். இந்த திதிக்கு நாக தேவதைகள் அதிதேவதை. நாக தோஷம் உள்ளவர்கள் இந்தத் திதியில் நாக பிரதிஷ்டை செய்து வேண்டி வழிபட, நாக தோஷம் விலகும். நாக பஞ்சமி விசேஷமானது.
சஷ்டி: சிற்ப, வாஸ்து காரியங்களில் ஈடுபடலாம் ஆபரணம் தயாரிக்கலாம். வாகனம் வாங்கலாம். புதியவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளலாம். புதிய பதவிகளை ஏற்றுக் கொள்ளலாம். இந்த திதிக்கு அதிதேவதை கார்த்திகேயன் ஆவார். முருகனை சஷ்டி விரதம் இருந்து வேண்டிக் கொள்பவர்களுக்கு சகல நலன்களும் உண்டாகும். சத்புத்திர பாக்கியம் கிட்டும்.
சப்தமி: பயணம் மேற்கொள்ள உகந்த திதி. வாகனம் வாங்கலாம். வீடு, தொழிலில் இடமாற்றம் செய்து கொள்ளலாம். திருமணம் செய்து கொள்ளலாம். சங்கீத வாத்தியங்கள் வாங்கலாம். ஆடை, அணிமணிகள் தயாரிக்கலாம். இதன் அதிதேவதை சூரியன். இந்த தினத்தில் சூரியனை வழிபடுவது சிறப்பாகும்.
அஷ்டமி: ஐந்து முகம் கொண்ட சிவன் (ருத்ரன்) இதற்கு அதிதேவதை ஆவார். பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். தளவாடம் வாங்கலாம். நடனம் பயிலலாம்.
நவமி: இதற்கு அம்பிகையே அதிதேவதை. சத்ருபயம் நீக்கும் திதி இது. நம்மைப் பற்றியுள்ள கெட்ட விஷயங்களை விலக்குவதற்கான முயற்சிகளை, தீவினை பாதிப்புகளைப் போக்குவதற்கான வழிபாடு களை இந்த நாளில் தொடங்கலாம்.
தசமி: எல்லா சுப காரியங்களிலும் ஈடுபடலாம். ஆன்மிகப் பணிகளுக்கு உகந்த நாளிது. பயணம் மேற்கொள்ளலாம். கிரகப்பிரவேசம் செய்யலாம். வாகனம் பழகலாம். அரசாங்கம் தொடர்பான காரியங்களை முன்னெடுக்கலாம். இந்தத் திதிக்கு எமதருமனே அதிதேவதை.
ஏகாதசி: விரதம் இருக்கலாம். திருமணம் செய்யலாம். புண்ணுக்கு சிகிச்சை செய்து கொள்ளலாம். சிற்ப காரியம், தெய்வ காரியங்களில் ஈடுபடலாம். இதற்கு, ருத்ரன் அதிதேவதை ஆவார்.
துவாதசி: மதச்சடங்குகளில் ஈடுபடலாம். அதிதேவதை விஷ்ணு ஆவார்.
திரயோதசி: சிவ வழிபாடு செய்வது விசேஷம். பயணம் மேற்கொள்ள லாம். புத்தாடை அணியலாம். எதிர்ப்புக்கள் விலகும். தெய்வ காரியங்களில் ஈடுபடலாம். புதியவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளலாம். கேளிக்கைகளில் ஈடுபடலாம்.
சதுர்த்தசி: ஆயுதங்கள் உருவாக்கவும், மந்திரம் பயில்வதற்கும் உகந்த நாள் இது. காளி இந்த திதிக்கு அதிதேவதை ஆவாள்.
பௌர்ணமி: ஹோம, சிற்ப, மங்கல காரியங்களில் ஈடுபடலாம். விரதம் மேற்கொள்ளலாம். இந்த நாளுக்கு பராசக்தி அதிதேவதை ஆவாள்.
அமாவாசை: பித்ருக்களுக்கு ஆற்றவேண்டிய கடன்களை, வழிபாடு களைச் செய்யலாம். தான- தர்ம காரியங்களுக்கு உகந்த நாள். இயந்திரப்பணிகள் மேற்கொள்ளலாம். சிவன், சக்தி அதிதேவதை ஆவார்கள்.