சேலம், கருப்பூரில் பெரியார் பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இப்பல்கலைக்கழகம் சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளை உள்ளடக்கியுள்ளது. சமீபத்தில் பல்கலைக்கழகத்தின் மூலம் முதுகலை மாணவர்களுக்கான இரண்டாம் கட்ட தேர்வு நடைப்பெற்றது. இதில், கடந்த ஜூலை 14 ஆம் தேதி வரலாற்றுத்துறை இரண்டாமாண்டு மாணவர்களுக்கான தேர்வில் வினா எண் 11-ல், `தமிழ்நாட்டில் உள்ள தாழ்த்தப்பட்ட சாதி எது?’ எனும் கேள்வி கேட்கப்பட்டிருந்தது. இதனை பார்த்த மக்கள், `ஆசிரியர்களே இப்படி சாதிய உணர்வை தூண்டும் விதமான கேள்வியை கேட்டுள்ளார்களே?’ என்று பேசும்விதமாக இருந்தது.
இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட வினாத்தாளை மாணவர் ஒருவர் சமூக வலைத்தளங்களில் வெளியிட, இச்சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக ஆரம்பித்தது. இதுதொடர்பாக பல்வேறு கட்சி தலைவர்கள் பல்கலைக்கழகத்துக்கு கண்டனம் தெரிவித்தனர். அதன்பின் பல்கலைக்கழக நிர்வாகம், நடந்த சம்பவம் குறித்து ஒரு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டது.
அதில், “தேர்வு நடத்தும் அதிகாரம் தான் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு உண்டே தவிர, வினாத்தாள் வெளியில் உள்ள பேராசிரியர் குழுவினரால் தயாரிக்கப்படும். எனவே நடந்த சம்பவம் குறித்து வினா தேர்வு செய்த பேராசிரியர் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக தனிக்குழு அமைத்து விசாரிக்கப்படும்” என்று தெரிவித்திருந்தனர். இதுகுறித்த செய்தி வைரலாக பல்கலைக்கழக வளாகத்தின் வாசலிலேயே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.
இந்நிலையில் நடந்த சம்பவம் குறித்து பல்கலைக்கழக பதிவாளர் கோபியிடம் பேசியபோது, “பல்கலைக்கழகத்தின் சார்பில் நடந்த சம்பத்திற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சம்பந்தப்பட்ட பேராசிரியரை தேர்வு வினாத்தாள் அமைக்கும் குழுவிலிருந்து நீக்கமும் செய்துவிட்டோம். மேலும் தனிக்குழு அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.
அப்பேராசிரியரை விசாரித்த வரையிலும், இந்த கேள்வி பாடத்திட்டத்திலேயே அமைந்துள்ளது. மேலும் கடந்த ஆண்டுகளில் இதே கேள்வி வினாத்தாளில் இடமும் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. அதனால் தான் இந்த கேள்வியினை தேர்ந்தெடுத்ததாக கூறியுள்ளார். மேலும் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதற்கு எங்களுக்கு அதிகாரம் இல்லை. அவர் பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு கீழ் வரக்கூடிய கல்லூரியை சேர்ந்த பேராசிரியர். எனவே அவர் மீது நாங்கள் நடவடிக்கை எடுக்க வாய்ப்பு கிடையாது’’ என்றார்.