பெங்களூரு : கர்நாடகாவில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில், முதல்வர் பசவராஜ் பொம்மை நடத்திய கருத்து கணிப்பில், 104 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.கர்நாடகாவில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், சில நாட்களுக்கு முன் பா.ஜ., மேலிடம் நடத்திய ரகசிய ஆய்வில் 70 – 80 தொகுதிகளில் மட்டுமே வெற்றி வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.
அதிர்ச்சி அடைந்த பா.ஜ., மேலிட தலைவர்கள், முதல்வர் பசவராஜ் பொம்மை, அமைச்சர்களுக்கு தனி பாடம் எடுத்தனர். ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர்களும் கடுமையாக கண்டித்தனர்.இதற்கிடையில், முதல்வர் தரப்பில் மாநிலம் முழுதும் தனியார் ஏஜன்சி மூலம் கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. அதாவது, பொம்மை முதல்வரான பின், அடுத்த தேர்தலில் மக்கள் யார் பக்கம் உள்ளனர் என்பதை பிரதானமாக வைத்து கருத்து கணிப்பு மேற்கொள்ளப்பட்டது.தற்போதைய சூழ்நிலையில் பா.ஜ.,வுக்கு 104 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு இருப்பதாக அறிக்கை வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.கல்யாண கர்நாடகா, கித்துார் கர்நாடகா, கடலோர கர்நாடகா, மத்திய கர்நாடகா பகுதிகளில் பா.ஜ.,வுக்கு நல்ல செல்வாக்கு இருப்பதாக தெரியவந்துள்ளது. அதே வேளையில் பழைய மைசூரு மண்டலத்தில் பெங்களூரு தவிர மற்ற பகுதிகளில் செல்வாக்கு அதிகரிக்கவில்லை என்றும் கணிக்கப்பட்டுள்ளது.இதனால், மகிழ்ச்சி அடைந்துள்ள முதல்வர், அடுத்த பத்து மாதங்களில் வெற்றி வாய்ப்பு தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில், வளர்ச்சி பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கு களமிறங்கியுள்ளார்.’பெரும்பான்மைக்கு தேவையான, 113 தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கு கூடுதல் சிரமப்பட வேண்டும். காங்கிரசில் தற்போது கோஷ்டி பூசல் உருவாகியுள்ள நிலையில், இதை சாதகமாக பயன்படுத்திக் கொள்ள சிறந்த வாய்ப்பு’ என, பா.ஜ., மேலிடம் அறிவுறுத்தியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement