இடுக்கி: முல்லைப் பெரியாற்றில் புதிய அணைக்கட்டு கட்டுவதற்கான திட்ட அறிக்கை தயாராக உள்ளது என்று கேரள நீர்வளத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டத்திற்கு அருகில் முல்லைப் பெரியாறு அணை அமைந்துள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்ட மக்களின் ஜீவாதாரமாக இந்த அணை விளங்குகிறது. இந்த அணை பராமரிப்பு, பாதுகாப்பு உள்ளிட்டவற்றிற்காக பல லட்சம் ரூபாய்களை தமிழக அரசு செலவழித்து வருகிறது. கேரளாவைப் பொறுத்தளவில் கனமழை பெய்து வெள்ளம், இயற்கை சீற்றம் ஏற்படும் போதெல்லாம் அதற்கு முல்லைப் பெரியாறு அணையில் இருந்து வரும் நீர்தான் காரணம் என்று கேரள அரசியல்வாதிகள் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்படும்.
சமீபகாலமாக முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்ட வேண்டும் என்பது கேரள அரசின் கோரிக்கையாக உள்ளது. இதற்கு தமிழகம் தரப்பில் கடும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டன. என்றாலும், அணை உடையும் நிலையில் உள்ளது, பாதுகாப்பற்ற நிலைக்கு மாறிவிட்டது என்று கூறி புதிய அணை கட்டும் முயற்சியில் தொடர்ந்து கேரளா ஈடுபட்டுள்ளது. நீதிமன்றத்தில் வழக்கும் இதுதொடர்பாக நிலுவையில் உள்ளது. ஏற்கனவே, அணையில் பராமரிக்கப்படும் அதிகபட்ச நீர்மட்டம் குறித்து இரு மாநில அரசுகளுக்கும் மோதல் போக்கு உள்ள நிலையில், மீண்டும் புதிய அணை குறித்த பேச்சை கேரள அரசு எழுப்பியுள்ளது.
கேரள நீர்வளத்துறை அமைச்சர் ரோஸி அகஸ்டின், நேற்றுமுன்தினம் மழை வெள்ள பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்ள மாநில அரசு எடுத்துள்ள நடவடிக்கையை மிக நீண்ட பதிவாக தமது வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தார். இதில், முல்லைப் பெரியாறு குறித்தும் குறிப்பிட்டிருந்த ரோஸி அகஸ்டின், ‘‘முல்லைப் பெரியாறில் புதிய அணை என்பது கேரள அரசின் நிலைப்பாடு. அதேபோல், அணையில் பராமரிக்கப்படும் அதிகபட்ச நீர்மட்டம் 136 அடி என்பதும் கேரளாவின் நிலைப்பாடு. இதில் எந்த மாற்றமும் இல்லை. இதன் நோக்கம், கேரளத்தின் பாதுகாப்பு மற்றும் தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்க வேண்டும் என்பதே. ஆனால் 142 அடி தேக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதனிடையே, தற்போதுள்ள அணையில் இருந்து 1300 அடிக்கு கீழே புதிய அணை கட்டுவதற்கான இடம் கண்டறியப்பட்டு, அதற்கான விரிவான திட்ட அறிக்கையும் தயாராக உள்ளது. நீதிமன்றத்தின் அனுமதி கிடைத்தவுடன், அணை கட்டுவதற்கான நடவடிக்கையை தொடங்க முடியும். முல்லைப் பெரியாறு விவகாரத்தில் கேரள அரசு முடிந்த அனைத்தையும் செய்து வருகிறது’’ என்று குறிப்பிட்டுள்ளார்.