மேகதாது விவகாரம் தொடர்பாக காவிரி மேலாண்மை ஆணையம் விவாதிக்கலாம் ஆனால் முடிவெடுக்க கூடாது என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
மேகதாது உள்ளிட்ட விரிவான திட்ட அறிக்கையை காவிரி மேலாண்மை ஆணையம் விசாரிக்க கூடாது என தமிழக அரசு தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. தமிழக அரசின் சார்பில் ஆஜராண மூத்த வழக்கறிஞர் வாதிட்டபோது, மேகதாது அணை திட்டத்தால் தமிழகத்திற்கான நீரின் அளவு குறையும் என்பதை குறிப்பிட்டார். குறிப்பாக 177புள்ளி டிஎம்சி தண்ணீர் கிடைக்காமல் போகும் நிலை ஏற்படும் என்றும் தெரிவித்தார். மேலும் மேகதாது அணை குறித்து விவாதிக்க காவிரி நீர் மேலாண்மை ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை என்றும் 22ம் தேதி நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணையம் கூட்டத்தை தள்ளி வைக்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் வாதிடப்பட்டது.
மேலும் கர்நாடக அரசின் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர், மேகதாது அணை திட்ட ஆய்வை நிறுத்தி வைக்க கூடாது என்றும் விரிவான திட்ட ஆய்வறிக்கையை மத்திய நீர்வள ஆணையம் ஆய்வு செய்யும் என்றும் வாதிட்டார். மேகதாது அணை திட்டத்தால் தமிழகத்திற்கு கிடைக்கும் நீர் குறையாது என்றும் இதனால் திட்ட அறிக்கையை ஆய்வு செய்ய மேலாண்மை ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்றும் அவர் வாதிட்டார்.
இந்நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி, மேகதாது விவகாரம் தொடர்பாக காவிரி மேலாண்மை ஆணையம் விவாதிக்கலாம்; ஆனால் முடிவெடுக்க கூடாது என்று கருத்து தெரிவித்தனர். மேலும் வழக்கு விசாரணையை வரும் 26ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil