சேலம்: மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 76,905 கனஅடி நீர் வரத்து இருக்கும் நிலையில், அணையில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 68 ஆயிரம் கனஅடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.
கர்நாடகா மாநிலம் காவிரி நீர் பிடிப்பு பகுதியில் மழை பெய்து வரும் நிலையில், காவிரியில் நீர் வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது. கடந்த 16-ம் தேதி மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ள நிலையில், அணைக்கு வரும் நீர் வரத்து முழுவதும் காவிரி ஆற்றில் உபரி நீராக வெளியேற்றப்பட்டு வருகிறது.
மேட்டூர் அணைக்கு நேற்று (19ம் தேதி) காலை 8 மணிக்கு ஒரு லட்சத்து 23 ஆயிரம் கன அடியாக இருந்த நீர் வரத்து, மாலை வினாடிக்கு 87 ஆயிரம் கன அடியாக குறைந்தது. இன்று மேட்டூர் அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 76, 905 கன அடியாக சரிந்த நிலையில், அணையின் 16 கண் மதகு வழியாக 45 ஆயிரம் கன அடியும், நீர்மின் நிலையங்கள் வழியாக 23 ஆயிரம் கன அடி என வினாடிக்கு 68,000 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.
கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 500 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணை நீர்மட்டம் 120.85 அடியாக உள்ளது. அணையில் நீர் இருப்பு 94.83 டிஎம்சி-யாக உள்ளது.
அணையில் இருந்து வினாடிக்கு 68 ஆயிரம் கன அடி உபரி நீர் வெளியேற்றப்படும் நிலையில், காவிரி கரையோர பகுதிகளில் பொதுப்பணித்துறை, தீயணைப்பு துறை மற்றும் காவல் துறையினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். காவிரி ஆற்றில் மீன் பிடிக்க, குளிக்க, துணி துவைக்க, செல்ஃபி எடுக்க மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து தடை விதித்துள்ளது.