வால்பாறையில் இருந்து கேரள மாநிலம் சாலக்குடிக்கு செல்லும் அரசுப் பேருந்து இயக்கம், கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்ட நிலையில், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மீண்டும் இன்று முதல் தனது பயணத்தை தொடங்கியுள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறை பகுதி கேரளா- தமிழக எல்லையில் அமைந்துள்ளது. வால்பாறையில் வசிக்கும் 30 சதவீதம் பேர்கள் கேரளா பகுதியைச் சேர்ந்தவர்கள், மேலும் வால்பாறையில் இருந்து கேரளா மாநிலம் சாலக்குடி பகுதிக்கு செல்ல வனப்பகுதியில் சாலை உள்ளது.
இந்நிலையில், வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகளும் வால்பாறையில் இருந்து கேரளாவுக்கு செல்லும் பொதுமக்களும் தனியார் பேருந்தின் மூலம் சென்று வருகின்றனர். முன்னதாக கடந்த 2013-ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி வரை தமிழக அரசு பேருந்து செயல்பட்டது. அப்போது 29-ஆம் தேதி வால்பாறையில் இருந்து சென்ற அரசுப் பேருந்து கேரள வனப்பகுதியில் விபத்துக்குள்ளானது. அதில் பலருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் பேருந்து இயக்கம் நிறுத்தப்பட்டது.
இதையடுத்து சாலக்குடிக்கு அரசுப் பேருந்தை இயக்கக் கோரி நீண்ட நாட்களாக பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதைத் தொடர்ந்து தமிழக அரசின் உத்தரவின் பேரில் இன்று வால்பாறையில் இருந்து சாலக்குடிக்கு அரசுப் பேருந்து இயக்கம் துவங்கப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் உற்சாகமாக வரவேற்று தங்கள் பயணத்தை மேற்கொண்டனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM