விருதுநகர் மாவட்டம், சாத்தூர் ரயில் நிலையம் அருகே உள்ள தண்டவாளத்தில் ரயிலில் அடிபட்டு வாலிபர் ஒருவர் சடலமாக கிடப்பதாக ரயில்வே போலீஸூக்குத் தகவல் கிடைத்தது. அதன்படி, தூத்துக்குடி ரயில்வே போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்டவாளத்தில் சடலமாக கிடந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து இறந்த நபர் குறித்து போலீஸார் நடத்திய விசாரணையில், தற்கொலை செய்துகொண்டவர் சாத்தூர் அருகே உள்ள சின்னக்காமல்பட்டியைச் சேர்ந்த கருப்பசாமியின் மகன் ராஜேஷ்(22) என்பது தெரியவந்தது. இவர் கடந்த மாதம் 9-ம் தேதி தமிழ்நாடு தீயணைப்புப் படையில் வேலைக்குச் சேர்ந்து கரூரில் பயிற்சி பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர், தனது பணியை ராஜினாமா செய்துவிட்டு சொந்த ஊருக்கு செல்ல சாத்தூருக்கு ரயிலில் வந்துள்ளார். தொடர்ந்து, தனது பேக் மற்றும் உடமைகளை ரயில் நிலைய நடைமேடையில் வைத்துவிட்டு நேற்று இரவே சரக்கு ரயில் முன் பாய்ந்து ராஜேஷ் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
ராஜேஷின் பர்ஸில் இருந்த விலாசத்தை வைத்தே அவர் உறவினர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டு வரவழைக்கப்பட்டுள்ளனர். பின்னர் இந்தச் சம்பவம் தொடர்பாக, அளிக்கப்பட்ட புகாரின்பேரில் தூத்துக்குடி ரயில்வே போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரசுப்பணியில் சேர்ந்து ஒரு மாதமே ஆன நிலையில் வேலையை ராஜினாமா செய்துவிட்டு ராஜேஷ் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் என்னவென்று போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.