மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய், 2021-ம் ஆண்டில் மட்டும் 1,63,370 இந்தியர்கள் இந்திய குடியுரிமையைத் துறந்து, வெளிநாடுகளில் குடியுரிமை பெற்றிருப்பதாக மக்களவையில் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த திங்கள்கிழமை முதல் நடைபெற்று வருகிறது. இதில் எதிர்க்கட்சி எம்.பி-க்கள் பலரும், மத்திய அரசின் பல்வேறு துறைகள் சார்ந்த கேள்விகளை எழுப்பிவருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில், பகுஜன் சமாஜ் எம்.பி ஹாஜி ஃபஸ்லுர் ரஹ்மான், 2019 முதல் நடப்பு ஆண்டு வரை இந்தியக் குடியுரிமையைத் துறந்தவர்களின் விவரங்களையும், எண்ணிக்கையையும் தெரிவிக்குமாறு கேள்வியெழுப்பினார்.
அதற்கு உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய், இந்திய குடியுரிமையைத் துறந்த இந்தியர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்கள் குடியுரிமை பெற்ற நாடுகளின் எண்ணிக்கை குறித்து வெளியுறவு அமைச்சகம் வழங்கிய விவரங்களை மேற்கோள் காட்டி பதிலளித்தார்.
அப்போது பேசிய நித்யானந்த் ராய், “2019-ம் ஆண்டில் 1,44,017 இந்தியர்களும், 2020-ம் ஆண்டில் 85,256 இந்தியர்களும், 2021-ம் ஆண்டில் 1,63,370 இந்தியர்களும் இந்திய குடியுரிமையைத் துறந்துள்ளனர். தற்போது அவர்கள் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து உட்பட 103 நாடுகளில் குடியுரிமை பெற்றிருக்கிறார்கள். இதில், அதிகபட்சமாக 78,284 பேர் அமெரிக்காவிலும், 23,533 பேர் ஆஸ்திரேலியாவிலும், 21,597 பேர் கனடாவிலும் குடியுரிமை பெற்றிருக்கிறார்கள். மேலும் இவர்கள் தங்களின் தனிப்பட்ட காரணங்களுக்காக இந்தியக் குடியுரிமையைத் துறந்தார்கள்” எனக் கூறினார்.