பெங்களூரு / புது டெல்லி: கடந்த இரு மாதங்களாக தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வந்த காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 16-வது கூட்டம் வரும் 22-ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது. ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் கர்நாடக அரசு தாக்கல் செய்துள்ள மேகேதாட்டு திட்டத்தின் வரைவு அறிக்கை குறித்து விவாதிக்கப்பட இருப்பதாக நிகழ்ச்சி நிரலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள தமிழக அரசு, மேகேதாட்டு திட்டம் குறித்து விவாதிக்க தடை விதிக்குமாறு உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது. இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வரும் என தெரிகிறது.
இதனிடையே தமிழக அரசு, “மேகேதாட்டு திட்டம் குறித்து விவாதித்தால் ஆணையக் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்வோம். இதுகுறித்து மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை புதன்கிழமை சந்தித்து மேகேதாட்டு திட்டம் குறித்து விவாதிக்கக்கூடாது என வலியுறுத்துவோம்” என கூறப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழைபெய்து வருவதால் காவிரியின் குறுக்கேயுள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய அணைகள் முழு கொள்ளளவை நெருங்கியுள்ளன. இதனால் காவிரியில் தமிழகத்துக்கு வினாடிக்கு 1.15 லட்சம் கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் மேட்டூர் அணை நிரம்பியுள்ளது. இதனால் இந்த ஆண்டு காவிரி நதி நீர் பங்கீட்டில் பிரச்சினை ஏற்படாது என தெரிகிறது.