சென்னை: ‘பே மேட்ரிக்ஸ்’ அடிப்படையில் ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட 22 கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்துக் கழக நிர்வாகங்களுக்கு சிஐடியு தொழிற்சங்கத்தினர் நேற்று வேலைநிறுத்த நோட்டீஸ் வழங்கினர்.
தமிழகத்தில் 8 அரசு போக்குவரத்துக் கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் 1.20 லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட வேண்டும்.
2016-ம் ஆண்டு இறுதி செய்யப்பட வேண்டிய 13-வது ஊதிய ஒப்பந்தம் ஓராண்டு கால தாமதமாக 2017-ம் ஆண்டு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து 14-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை கடந்த ஆண்டு தொடக்கத்தில் அதிமுக ஆட்சி காலத்தில் இருந்து நடத்தப்பட்டு வந்த நிலையில், ஒப்பந்தம் இன்னும் முடிவாகவில்லை.
இறுதியாக, கடந்த மே மாதம் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், 2019-ம் ஆண்டு செப்.1-ம் தேதியில் இருந்து 2 சதவீத உயர்வும், நிகழாண்டு ஜன.1-ம் தேதியில் இருந்து 3 சதவீத உயர்வும் என மொத்தம் 5 சதவீத ஊதிய உயர்வு அளிக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து அடுத்தகட்ட பேச்சுவார்த்தை, இம்மாதம் 11-ம் தேதி அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமையில் நடைபெற்றது. ஆனால் ஒப்பந்தம் இறுதி செய்யப்படவில்லை. அடுத்தகட்ட பேச்சுவார்த்தை குறித்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
எனவே, ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும், ‘பே மேட்ரிக்ஸ்’ அடிப்படையில் ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 22 கோரிக்கைகளை வலியுறுத்தி, போக்குவரத்துக் கழகங்களில் செயல்படும் சிஐடியு தொழிற்சங்க நிர்வாகிகள், தமிழகத்தில் உள்ள அனைத்து போக்குவரத்துக் கழக தலைமையகங்களுக்கும் வேலை நிறுத்த நோட்டீஸை நேற்று வழங்கினர்.
இதுகுறித்து அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்க துணைத்தலைவர் எம்.சந்திரன், செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘போக்குவரத்து எனும் சேவைத் துறையில் லாப, நஷ்டத்தைப் பார்க்க முடியாது. எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு நிர்வாகத்துக்கு கூடுதல் அழுத்தத்தைத் தரும்வகையில் விதிகளைப் பின்பற்றியே வேலைநிறுத்த நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. கோரிக்கைகள் நிறைவேறாத பட்சத்தில் ஆக.3-ம் தேதியோ, அதற்கு பிறகோ வேலைநிறுத்தம் நிச்சயம் நடக்கும்’’ என்றார்.