காமன்வெல்த் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து தமிழகத்தைச் சேர்ந்த தடகள வீராங்கனை தனலட்சுமி தகுதிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். அனபோலிக் என்ற ஊக்க மருந்து சோதனையில் தோல்வியடைந்ததால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. 2022-ம் ஆண்டிற்கான காமன்வெல்த் போட்டி பர்மிங்காமில் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை நடைபெற இருக்கிறது. இந்தியாவிலிருந்து இந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் மொத்தம் 19 பிரிவுகளில் 141 போட்டிகளில் 215 விளையாட்டு வீரர்களும், வீராங்கனைகளும் பங்கேற்க இருக்கின்றனர். .
கடந்த மார்ச் மாதம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற இந்திய கிராண்ட் ஃப்ரீ தடகள பந்தயத்தின் 200 மீ ஓட்டத்தில் ஹீமா தாஸை பின்னுக்குத் தள்ளி தமிழக வீராங்கனையான தனலட்சுமி தங்கம் வென்றிருக்கிறார். 200 மீட்டர் தூரத்தை 23.26 விநாடிகளில் கடந்து சாதனை படைத்த இவர், இதன் மூலம் 23 ஆண்டுகளாக முறியடிக்கப்படாத பி.டி. உஷாவின் சாதனையை முறியடித்திருக்கிறார். அந்த தொடரில் ஹீமா தாஸ், டுடி சந்த் ஆகிய 2 நட்சத்திர வீராங்கனைகளையும் தனலட்சுமி வீழ்த்தினார் என்பது குறிப்பிடதக்கது. ஆனால் தற்போது ஊக்க மருந்து சோதனையில் தோல்வியடைந்ததால் இந்திய அணியில் இருந்து தனலட்சுமி நீக்கம் செய்யப்பட்டிருப்பது அனைவரிடத்திலும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது.