இலங்கை நாட்டின் புதிய அதிபராக, ரணில் விக்ரமசிங்கே தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
அண்டை நாடான இலங்கையின் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ள நிலையில், அரசியலிலும் குழப்பமான சூழல் நிலவி வருகிறது. அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே மக்களின் தீவிர போராட்டத்தைத் தொடா்ந்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு, பதவியை ராஜினாமா செய்தார்.
மேலும், மக்களின் போராட்டங்களுக்கு பயந்து, மாலத்தீவு நாட்டில் தஞ்சம் அடைந்த கோத்தபய ராஜபக்சே, தற்போது, சிங்கப்பூர் நாட்டில் தஞ்சம் அடைந்துள்ளாா். இதை அடுத்து, மக்களின் அதிருப்தியைச் சந்தித்த பிரதமா் ரணில் விக்ரமசிங்க நாட்டின் இடைக்கால அதிபராகப் பொறுப்பேற்றார்.
இந்நிலையில் தலைநகர் கொழும்புவில் உள்ள இலங்கை நாடாளுமன்றத்தில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடைபெற்றது. இதில், 223 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர். 2 உறுப்பினர்கள் வாக்களிக்கவில்லை. 219 வாக்குகள் செல்லுபடியாகும். 4 வாக்குகள் செல்லாதவை என அடையாளம் காணப்பட்டது.
இலங்கையில் அமைதி வழியில் ஆட்சி மாற்றம்: ஐ.நா வலியுறுத்தல்!
இந்தத் தேர்தலில், 134 எம்பிக்கள், இடைக்கால அதிபர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு வாக்களித்து உள்ளனர். இதன்படி, இலங்கையின் 8வது புதிய அதிபராக, ரணில் விக்ரமசிங்கே தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இவர், கோத்தபய ராஜபக்சேவின் பதவிக்காலமான 2024 நவம்பர் மாதம் வரை அதிபராக பதவியில் இருப்பார்.
இதன் மூலம், இரண்டு அதிபர் தேர்தல்களில் தோல்வி அடைந்து எம்.பி., பதவியை கூட இழந்த ரணில் விக்ரமசிங்கே, இன்று இலங்கையின் எட்டாவது அதிபராக தேர்வு செய்யப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.