YouTube: 78 யூடியூப் சேனல்கள் கதி… மோடி அரசு வைத்த டார்கெட்!

Indian Youtube Channels Terminated: ஒன்றிய அரசு பல காலங்களாக வளர்ந்து வரும் சமூக தளங்களை கவனமாக நோக்கி வருகிறது. இதில் தவறு மேற்கொள்ளும் தனிநபர் கணக்குகள் அல்லது நிறுவனங்களின் கணக்குகளை முடக்கியும் உத்தரவிட்டு வருகிறது.

அந்த வகையில் தற்போது 78 யூடியூப் செய்தி சேனல்கள் மற்றும் அவற்றின் சமூக ஊடக கணக்குகளை அரசு தடை செய்துள்ளது. இந்தத் தகவலை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

யூடியூப் சேனல்கள் தடைக்கான காரணம்

சட்டத்திட்டங்களை மீறி செயல்பட்டதாகக் கூறி இந்த 78 யூடியூப் செய்தி சேனல்கள் மற்றும் அவற்றின் சமூக ஊடக கணக்குகளை தடை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

இப்போது எடுக்கப்பட்டிருக்கும் 78 யூடியூப் செய்திகள் மற்றும் அவற்றின் சமூக ஊடக கணக்குகளுக்கு எதிரான நடவடிக்கை, தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000ன் பிரிவு 69A-ஐ மீறுவதாகும். இரண்டு ஆண்டுகளில் 560 யூடியூப் இணைப்புகளை அரசு தடுத்துள்ளது என்று அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் கூறினார்.

தடுக்கப்பட்ட யூடியூப் செய்தி சேனலுக்கு 68 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது. மக்களவையில் எழுத்துப்பூர்வ கேள்விக்கு செவ்வாய்க்கிழமை பதிலளித்துப் பேசிய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் இந்தத் தகவலை வெளிப்படுத்தினார்.

விருதுநகரைச் சேர்ந்த காங்கிரஸ் மக்களவை உறுப்பினரான மாணிக்கம் தாகூர், அரசாங்கத்தால் மூடப்பட்ட யூடியூப் செய்தி சேனல்களின் எண்ணிக்கை குறித்த தகவல்களைக் கோரியதற்கு, இந்த தகவலை வெளியிட்டு அமைச்சர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தொடர் கண்காணிப்பில் சமூக வலைத்தளங்கள்

இதுபோன்ற நடவடிக்கையை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் ஏற்கனவே எடுத்துள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், 16 யூடியூப் செய்தி சேனல்களுக்கு தடை விதிக்கப்பட்டன.

இதில், தேசிய பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கில் இந்தியாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டு, பாகிஸ்தானில் இருந்து இயக்கப்படும் 10 இந்திய சேனல்கள் அடங்கும். இந்த நடவடிக்கை ஐடி சட்டம் 2021 விதிகளின் கீழ் எடுக்கப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.