கொள்ளிடம் ஆற்றில், அணைக்கரை மதகு சாலைப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் ஆகாஷ், மனோஜ், அப்பு ஆகியோர் மீன் பிடித்துக் கொண்டிருந்த பொழுது, வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டனர். இதில் மனோஜ், ஆகாஷின் உடல்கள் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் அப்புவின் உடலை தேடி வருகின்றனர். இந்தநிலையில் உயிரிழந்த இளைஞர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, அரசிடம் நிவாரணமும் கேட்டிருக்கிறார் பாமக தலைவர் அன்புமணி.
இது தொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “கொள்ளிடத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட அணைக்கரை மதகுசாலை கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் ஆகாஷ், மனோஜ் ஆகியோர் உயிரிழந்ததை அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். அவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலும் அனுதாபங்களும்.
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இன்னொருவரான அப்புவை தேடிக் கண்டுபிடிக்கும் பணிகளை அரசு விரைவுபடுத்த வேண்டும். உயிரிழந்த ஆகாஷ், மனோஜ் ஆகியோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசு முன்வரவேண்டும்.
கொள்ளிடத்தில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிருடன் மீட்கப்பட்டாலும் அதிர்ச்சி காரணமாக பேசும் திறனை இழந்த கொளஞ்சி என்பவருக்கு உரிய மருத்துவம் அளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அவருக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.