Ma Subramanian says Centre asks these Clarifications to TN Govt on anti NEET bill: நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதா, தேசிய கல்விக் கொள்கை மற்றும் பல்வேறு சட்டங்களுக்கு முரணானதா, தேசிய ஒற்றுமை மற்றும் இறையாண்மையை பாதிக்குமா என்பதை தெளிவுபடுத்துமாறு தமிழக அரசை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
நீட் (NEET) தேர்வு என்பது இந்தியா முழுவதும் உள்ள மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் MBBS மற்றும் BDS படிப்புகளுக்கான பொதுவான தகுதித் தேர்வாகும். இது தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படுகிறது.
இதையும் படியுங்கள்: மயிலாப்பூர், தாம்பரம், பல்லாவரம்… சென்னையில் இன்று இந்த ஏரியாக்களில் மின் தடை!
ஆனால், நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு விரும்புகிறது. மேலும், 12 ஆம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்களை மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கலாம் என்றும் தமிழக அரசு பரிந்துரைத்துள்ளது.
இதனையடுத்து தமிழக சட்டமன்றத்தில் நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநர் மூலம் குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா கூறியதாவது: இந்தியக் குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காகவும் ஒப்புதலுக்காகவும் தமிழக ஆளுநரால் அனுப்பப்பட்ட ‘இளநிலை மருத்துவ பட்டப்படிப்புகளுக்கான தமிழ்நாடு சேர்க்கை மசோதா, 2021’ என்ற மசோதா, மே 2, 2022 அன்று உள்துறை அமைச்சகத்தால் பெறப்பட்டது.
நடைமுறைப்படி, குடியரசுத் தலைவரின் பரிசீலனை மற்றும் ஒப்புதலுக்காக மாநிலங்களின் ஆளுநர்களால் ஒதுக்கப்பட்ட மசோதாக்கள் மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகளுடன் கலந்தாலோசித்து உள்துறை அமைச்சகத்தில் செயலாக்கப்படும். அதன்படி, நீட் விலக்கு மசோதா தொடர்பான மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகளுடன் ஆலோசனை செயல்முறை தொடங்கப்பட்டுள்ளது.
“சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் மற்றும் ஆயுஷ் அமைச்சகம் தங்கள் கருத்துகள் மற்றும் விளக்கங்களுக்காக முறையே ஜூன் 21, 2022 மற்றும் ஜூன் 27, 2022 அன்று தமிழ்நாடு அரசாங்கத்துடன் பகிர்ந்து கொள்ளப்பட்ட மசோதாவில் தமிழக அரசின் ‘கருத்துகளை’ கேட்டுள்ளன” என மக்களவையில் எழுத்துப்பூர்வமாக எழுப்பப்பட்ட கேள்விக்கு அமைச்சர் பதிலளித்தார்.
இந்தநிலையில், நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதா, தேசிய கல்விக் கொள்கை மற்றும் பல்வேறு சட்டங்களுக்கு முரணானதா, தேசிய ஒற்றுமை மற்றும் இறையாண்மையை பாதிக்குமா என்பதை தெளிவுபடுத்துமாறு தமிழக அரசை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், நீட் விலக்கு மசோதா தொடர்பாக பல்வேறு அமைச்சகங்களின் கருத்துகளை மத்திய அரசு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் தெரிவித்தது. ஜூலை 5 ஆம் தேதி, ஆளுநர் மத்திய அரசின் கேள்வியை தமிழக அரசுக்கு அனுப்பியுள்ளார்.
எங்கள் சட்டக் குழு மூலம் நாங்கள் பதிலைத் தயாரித்துள்ளோம், இது முதலமைச்சரின் அனுமதிக்குப் பிறகு ஓரிரு நாட்களில் அனுப்பப்படும்.
இச்சட்டம் நிறைவேற்றப்பட்ட சட்டப் பேரவையின் அதிகாரம் குறித்தும், இந்திய மருத்துவச் சட்டம், இந்திய மருத்துவக் கவுன்சில் சட்டம், ஹோமியோபதி மத்திய கவுன்சில் சட்டம் ஆகியவற்றுக்கு முரணாக உள்ளதா என்பதையும் விளக்குமாறு அந்தக் கடிதத்தில் தமிழக அரசிடம் கேட்கப்பட்டுள்ளது.
முன்மொழியப்பட்ட சட்டம் மருத்துவத் தேர்வுகளுக்கான தற்போதைய தரப்படுத்தப்பட்ட, லெவல் பிளேயிங் மற்றும் வெளிப்படையான தேசிய அளவிலான நுழைவை பாதிக்குமா என்றும் கடிதத்தில் கேட்கப்பட்டுள்ளது.
சட்டத்தின் முன் சமத்துவத்தை ஊக்குவிக்கும் அரசியலமைப்பின் 14 வது பிரிவை இந்த மசோதா மீறுமா என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு தமிழக அரசை மத்திய அரசு கேட்டுள்ளது.
இந்த மாத தொடக்கத்தில் கவர்னரிடமிருந்து கடிதம் தமிழக அரசுக்கு கிடைத்ததது. மருத்துவம் மற்றும் பல் மருத்துவத்திற்கான 12 ஆம் வகுப்பு அடிப்படையிலான தேர்வுகளை நடத்துவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். மத்திய அரசின் கேள்விகளுக்கான எங்கள் பதில்கள் அவற்றைப் பிரதிபலிக்கும், என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.