பீஜிங்,
2035-ம் அண்டுக்குள் 4.61 லட்சம் கி.மீ. தொலைவுக்கு சாலை அமைக்க சீனா முடிவு செய்துள்ளது. 345 கட்டுமானங்களை கொண்ட இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக திபெத்தின் லுன்சே கவுண்டியில் இருந்து ஜின்ஜியாங் பிராந்தியத்தின் காஷ்கர் வரை சாலை அமைக்க சீனா திட்டமிட்டு உள்ளது. இந்த லுன்சே கவுண்டி, இந்தியாவின் அருணாசல பிரதேசத்தின் சில பகுதிகளை கொண்டதாகும். அருணாசல பிரதேசத்தை தெற்கு திபெத் என உரிமை கொண்டாடி வரும் சீனா, அதில் தனது கட்டுமான பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளது.
ஜி695 என்ற பெயரிடப்பட்டுள்ள இந்த நெடுஞ்சாலை அருணாசல பிரதேசம், சிக்கிம் போன்ற மாநிலங்களில் இந்திய-சீன அசல் எல்லை கட்டுப்பாட்டுக்கோடு வழியாக செல்கிறது. இந்த சாலைப்பணிகள் முடிவுற்றால் கிழக்கு லடாக்கில் தற்போது சர்ச்சைக்குரிய பகுதிகளாக விளங்கும் தெப்சாங், கல்வான் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பகுதிகளையும் சீனாவால் எளிதில் அடைய முடியும் என கூறப்படுகிறது. இந்த சாலை இந்தியாவுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் என பாதுகாப்பு வல்லுனர்கள் கூறியுள்ளனர்.