வேலையின்மை, பணவீக்கம் நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில், பேக் செய்யப்பட்ட அரிசி, பால், தயிர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள்மீது மத்திய அரசு 5 சதவிகித ஜி.எஸ்.டி வரி விதித்திருப்பதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
கடந்த திங்கள்கிழமை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், கடந்த மூன்று நாள்களாக ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் எம்.பி-க்கள் பலரும் மத்திய அரசுக்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்திலேயே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த நிலையில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தியில், “ஜி.எஸ்.டி பற்றி விவாதிக்க – சபை ஒத்திவைக்கப்பட்டது. பணவீக்கம் பற்றி விவாதிக்க – சபை ஒத்திவைக்கப்பட்டது. அக்னிபத் பற்றி விவாதிக்க – சபை ஒத்திவைக்கப்பட்டது. ஏஜென்சிகளைத் தவறாகப் பயன்படுத்துவதைப் பற்றி விவாதிக்கவும் சபை ஒத்திவைக்கப்பட்டது. இன்று பொதுவெளியில் நாட்டு மக்களின் குரல் பகிரங்கமாக நசுக்கப்படுகிறது. ஆனால், இந்த ஆணவம், சர்வாதிகாரத்தையும்விடவும் உண்மை வெல்லும்” என மத்திய அரசைச் சாடி பதிவிட்டிருக்கிறார்.
முன்னதாக நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்.பி-க்கள் நடத்திய ஆர்ப்பாட்டம் குறித்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, “நாடாளுமன்றத்தில் இதுவரை ஒரு தனிநபர் மசோதாவைக் கூட கொண்டுவராத ராகுல் காந்தி, அங்கு ஆக்கபூர்வமான விவாதங்கள் ஏதும் நடக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார். மேலும், மக்களவையின் செயல்திறனைக் கீழே கொண்டுவருவதில் அவர் விடாப்பிடியாக இருக்கிறார்” என ராகுல் காந்தியை விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.