கொழும்பு:இலங்கையின் புதிய அதிபராக, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, 73, நேற்று பதவியேற்றார்.
பொருளாதார சிக்கலில் இருந்து நாட்டை மீட்பதுடன், மக்களின் எதிர்ப்பை சந்திக்க வேண்டிய பெரும் சவால் அவருக்கு காத்திருக்கிறது.நம் அண்டை நாடான இலங்கை, கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. அன்னியச் செலாவணி கையிருப்பு இல்லாததால், பெட்ரோல், டீசல் வாங்க முடியாமல் இலங்கை திண்டாடுகிறது. இதனால், மின் உற்பத்தி தடை, விலைவாசி உயர்வு என, மக்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
ஓட்டெடுப்பு
இந்தப் பிரச்னைகள் தீவிரமடைந்ததால், அரசுக்கு எதிராக மக்கள் கொந்தளித்தனர். இதனால், அதிபர் கோத்தபய ராஜபக்சே, அவருடைய சகோதரர்களான பிரதமர் மகிந்த ராஜபக்சே, நிதி அமைச்சர் பசில் ராஜபக்சே பதவி விலகினர். கோத்தபய சிங்கப்பூருக்கு தப்பி ஓடினார். இதைத் தொடர்ந்து, பிரதமராக பதவியேற்ற ரணில் விக்ரமசிங்கே, தற்காலிக அதிபரானார். இந்நிலையில், அதிபர் பதவிக்கு ஓட்டெடுப்பு நடந்தது. இதில், ராஜபக்சே சகோதரர்களின் இலங்கை பொதுஜன பெரமுணா கட்சியின் ஆதரவுடன், புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நாட்டை மீட்பது
பார்லிமென்ட் வளாகத்தில்நடந்த நிகழ்ச்சியில், ரணில் விக்ரமசிங்கே, நாட்டின் எட்டாவது அதிபராக பதவியேற்றார். அந்நாட்டின் தலைமை நீதிபதி ஜெயந்த ஜெயசூர்யா, முப்படை தளபதிகள், பார்லிமென்ட் சபாநாயகர் மகிந்த யாபா அபேயவர்தனே உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.
விரைவில், 20 – 25 அமைச்சர்கள் உடைய அமைச்சரவையை அவர் அமைக்க உள்ளார். பிரதமராக இருந்தபோது, சர்வதேச நிதியத்தின் நிதி உதவியைப் பெறும் முயற்சியில் ரணில் ஈடுபட்டிருந்தார். தற்போது, அது வேகமெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொருளாதார சிக்கலில் இருந்து நாட்டை மீட்பதுடன், பெட்ரோல், டீசல் போன்றவற்றுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டை நீக்குவது, விலைவாசி உயர்வை குறைப்பது போன்றவை, அவருக்கு மிகப் பெரும் சவாலாக இருக்கும்.ராஜபக்சே சகோதரர்களின் ஆதரவுடன் அதிபராக அவர் பதவியேற்றுள்ளதால், மக்கள் கொந்தளிப்புடன் உள்ளனர். அவர் பதவி விலகக் கோரி, போராட்டங்களும் நடந்து வருகின்றன.
மிகப் பெரிய சவால்
இந்தப் போராட்டங்களை நிறுத்தி, மக்களை சமாதானப்படுத்தும் மிகப் பெரிய சவாலும் ரணில் விக்ரமசிங்கேவுக்கு காத்திருக்கிறது.ரணில் விக்ரமசிங்கே அதிபராக பதவியேற்ற போது, திடீரென பார்லிமென்ட் வளாகத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால், அவர் பதவியேற்ற காட்சிகளை, அரசு ‘டிவி’யில் ஒளிபரப்ப முடியவில்லை. இது, சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுஉள்ளது.
14 நாட்களுக்கு மட்டுமே ‘விசா’
மக்களின் கொந்தளிப்பு தீவிரமானதைத் தொடர்ந்து, அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே, மாலத் தீவுகளுக்கு தப்பிச் சென்றார்; அங்கிருந்து சிங்கப்பூர் சென்றுள்ளார். அவர் அங்கு தங்குவதற்கு, சிங்கப்பூரில் உள்ள தமிழர்கள் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தனிப்பட்ட முறையில் வருகை தந்துள்ள அவருக்கு, 14 நாட்களுக்கு குறுகிய கால ‘விசா’ வழங்கியுள்ளதாக சிங்கப்பூர் அரசு தெரிவித்துள்ளது. அவர் அடைக்கலம் கேட்டு வரவில்லை என்றும், அரசியல் அடைக்கலம் தரவில்லை என்றும் சிங்கப்பூர் அரசு தெரிவித்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்