கொழும்பு: இலங்கை நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற ரகசிய வாக்கெடுப்பில் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்க(73) தேர்வு செய்யப்பட்டார். மொத்தம் பதிவான 223 வாக்குகளில் ரணிலுக்கு ஆதரவாக 134 வாக்குகள் கிடைத்தன.
வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில், அத்தியாவசியப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. மக்களின் தன்னெழுச்சியான போராட்டத்தால் பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்ச விலகினார். இதையடுத்து, அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சவும் கடந்த வாரம் பதவி விலக நேரிட்டது.
முன்னதாக, இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கவை நியமித்த அவர், மாலத்தீவுக்கும், பின்னர் சிங்கப்பூருக்கும் தப்பிச் சென்றுவிட்டார். இதனால், புதிய அதிபரை தேர்வு செய்ய இலங்கை நாடாளுமன்றத்தில் ரகசிய வாக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப் பட்டது.
அதிபர் பதவிக்கு இடைக்கால அதிபரும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க, சமகி ஜன பலவேகயா கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (55), ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (எஸ்எல்பிபி) கட்சி எம்.பி. டல்லஸ் அழகப்பெரும (63), இடதுசாரி ஜனதா விமுக்தி பெரமுன (ஜேவிபி) கட்சித் தலைவர் அனுரா குமார திசநாயக (53) ஆகிய 4 பேர் போட்டியிட்டனர்.
இந்நிலையில், சஜித் பிரேமதாச நேற்று முன்தினம் திடீரென போட்டியிலிருந்து விலகினார். நாட்டு நலனுக்காக இந்த முடிவை எடுத்ததாகவும், தனது ஆதரவை போட்டி வேட்பாளர் டல்லஸ் அழகப்பெரு மவுக்கு வழங்குவதாகவும் அவர் அறிவித்தார்.
இலங்கை நாடாளுமன்றத்தில் மொத்தம் 225 எம்.பி.க்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்த நிலையில், வாக்கெடுப்பில் வெற்றி பெற 113 வாக்குகளைப் பெறுவது அவசியமாகும். நேற்று காலை நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ரகசிய வாக்கெடுப்பில் 223 எம்.பி.க்கள் வாக்களித்தனர். 2 எம்.பி.க்கள் வாக்களிக்கவில்லை. 4 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டதால், 219 வாக்குகளே போட்டியாளர்களின் தலைவிதியைத் தீர்மானித்தன.
இந்நிலையில், 134 வாக்குகளைப் பெற்று, இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்க தேர்வு செய்யப்பட்டார். எஸ்எல்பிபி எம்.பி. டல்லஸ் அழகப்பெரும 82 வாக்குகள் பெற்ற நிலையில், ஜேவிபி தலைவர் அனுரா குமார திசநாயக 3 வாக்குகள் மட்டுமே பெற்றார்.
இதையடுத்து, ரணில் வெற்றிபெற்றதாக நாடாளுமன்றச் செயலாளர் அறிவித்தார். அதிபராக தேர்வு செய்யப்பட்ட பிறகு நாடாளுமன்றத்தில் ரணில் விக்ரமசிங்க பேசும்போது, “என்னை அதிபராகத் தேர்வுசெய்து கவுரவித்த நாடாளுமன்றத்துக்கு நன்றி. புதிய அதிபர் யார் என்பதில் நம்மிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் முடிந்துவிட்டன. நாம் எதிர்கொண்டுள்ள நெருக்கடியில் இருந்து மீண்டு வருவதில் டல்லஸ் அழகப்பெரும என்னுடன் இணைந்து பணியாற்ற வேண்டும்” என்றார்.
இலங்கையின் 8-வது அதிபரான ரணில் விக்ரமசிங்க, 6 முறை இலங்கைப் பிரதமராக பதவி வகித்துள்ளார். கோத்தபய ராஜபக்சவின் பதவிக் காலமான நவம்பர் 2024 வரை அவர் அதிபராகச் செயல்படுவார் எனத் தெரிகிறது. முன்னதாக, அதிபர் தேர்தலில் ரணில் 2 முறை போட்டியிட்டு தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.
கோத்தபய ராஜபக்ச மாலத்தீவுக்கு தப்பிச் சென்ற நிலையில் இலங்கையில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், ரணில் அதிபராக தேர்வு செய்யப்பட்டதும், இலங்கையில் அவசரநிலைப் பிரகடனத்தை நீட்டித்து உத்தரவிட்டார்.
இலங்கையில் புதிய அதிபராக ரணில் தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவரது ஆதரவாளர்கள் பல்வேறு இடங்களில் வெற்றியைக் கொண்டாடினர்.
பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்த தாய்நாட்டை கட்டியெழுப்பக் கூடிய ஒரே தலைவர் ரணில் விக்ரமசிங்க என அவரது ஐக்கிய தேசியக் கட்சி கூறியுள்ளது. மேலும், அரசியல் வேறுபாடுகளைக் களைந்து, நாட்டைப் பொருளாதார ரீதியாக கட்டியெழுப்ப நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தற்போதைய அதிபர் ரணிலுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றும் அக்கட்சி கூறியுள்ளது.
தொடரும் போராட்டம்
இந்நிலையில், தலைநகர் கொழும்புவில் அதிபர் மாளிகை முன் ரணில் விக்ரமசிங்க பதவி விலக வலியுறுத்தி, பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரு கின்றனர்.
போராட்டக்காரர்களின் பிரதிநிதி ஒருவர் கூறும்போது, “ரணில் விக்ரமசிங்க பதவி விலக வேண்டும் என்பது எங்கள் 2-வது கோரிக்கை. மக்களின் விருப்பத்துக்கு மாறாக அதிபர் நியமனம் செய்யப்பட்டுள்ளதால், அவர் பதவி விலகக் கோரி அமைதியான வழியில் போராட்டம் தொடரும்” என்றார்.