கொழும்பு,
இலங்கையில் நிலவும் வரலாறு காணாத கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பொருளாதார நெருக்கடிக்கு எந்த நடவடிக்கையும் எடுக்காத அரசைக் கண்டித்து நடைபெற்று வரும் மக்கள் போராட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. 100 நாட்களை கடந்து போராட்டம் நடைபெறுகிறது.
இந்த நிலையில், இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள பாஸ்போர்ட் சேவை மையத்தில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் குவிந்துள்ளனர்.
இலங்கையில் அத்தியாவசிய தேவைக்கான பொருட்களை கூட சாமானிய மக்கள் வாங்க முடியாத அளவுக்கு விலைவாசி உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த சூழலில் வெளிநாடுகளுக்கு சென்று பிழைத்துக் கொள்ளலாம் என்றெண்ணி பொதுமக்கள் பலரும் வெளிநாடுகளில் பணியாற்ற ஆர்வம் கொண்டுள்ளதால் தங்கள் பாஸ்போர்ட்டை புதுப்பிக்க வருகை தந்துள்ளனர்.
இது குறித்து இலங்கையை சேர்ந்த ஒருவர் கூறுகையில், “நாட்டில் தற்போதைய சூழலில், ஒருசில வேலை வாய்ப்புகள் மட்டுமே உள்ளன மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை வெகுவாக உயர்ந்துள்ளன.
அதனால் தான் வேலை நிமித்தமாக சவூதி அரேபியா செல்ல எனது பாஸ்போர்ட்டை புதுப்பிக்க வந்துள்ளேன்” என்று கூறினார். இவர் மட்டுமன்றி அங்கு வந்துள்ள பலரும் இதே காரணத்தை முன்வைக்கின்றனர்.