உதடுகள் | சிறுகதை | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்

இவ்வளவு பிரகாசமான நிலவை கல்கி இதற்கு முன்பு பார்த்ததில்லை. அவ்வளவு பளிச்சென இருந்தது. அந்த நிலவொளியில் தன்னந்தனியாக சாலையில் நடந்து செல்ல அது அவனை பின் தொடர்ந்து வந்துகொண்டே இருந்தது. ஓரக்கண்ணால் நிலவை பார்த்து விட்டு மீண்டும் நடக்கத் தொடங்கினான். நிலா அவனை மீண்டும் பின் தொடர்ந்தது. தன்னை நிலா ஃபாலோ செய்கிறது என்பதை உணர்ந்த கல்கி மீண்டும் ஓரக்கண்ணால் நிலவை பார்த்தான். “என்னடா சைடு பார்வை பாக்குற… நான் உன்ன தான் பாக்க வந்துருக்கேன்…” என்று நிலா அவனிடம் பேச இவ்வளவு பிரகாசமான நிலா நம்மிடம் பேசுகிறதே… யாரிடமும் நிலா பேசியதாக வரலாறு இல்லை… வரலாற்றில் முதன்முறையாக தன்னிடம் தான் நிலா பேசுவதாக உணர்ந்த கல்கி, “நீ பேசுவியா…” என்றான்.

“ஓ நல்லா பேசுவனே…” என்று நிலா பதிலளிக்க அவனுக்கு நிலவிடம் பேசுகிறோம் என்பது பெருமிதமாய் இருந்தது.

“நீ இங்கயே இருக்கியா… நான் போயி செல் எடுத்துட்டு வரேன்… நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து வீடியோ பண்ணுவோம்…” என்று கல்கி சொல்ல… “சீக்கிரம் போயி எடுத்துட்டு வா…” என்று பதில் சொன்னது நிலா.

Representational Image

பேசுகின்ற நிலாவோடு சேர்ந்து ஒரு வீடியோ எடுத்திட வேண்டுமென்று அவசர அவசரமாக வீட்டிற்குள் ஓடினான். அம்மாவின் செல்போனை துளாவினான். அவ்வளவு எளிதாக செல்போன் தென்படவில்லை. ஐயயோ நேரமாச்சுனா நிலா எங்கயாவது போயிடுமே என்று பதறி வீடு முழுக்க தேடிவிட்டு கடைசியாக உறங்கிக்கொண்டிருந்த அம்மாவிடம் வந்தான். அம்மாவை சுற்றி சுற்றி தேடினான். கிடைக்கவில்லை. தூங்கிக்கொண்டிருந்த அம்மாவை புரட்டிப் போட்டு அவர் முதுகுக்கு அடியிலிருந்த செல்லை எடுத்தான். அம்மாவின் முதுகுச்சூடு செல்போனில் பரவியிருந்தது. அந்த சூடான செல்போனை எடுத்துக்கொண்டு வாசலுக்கு ஓடி வானத்தை பார்த்தான். நிலா காணாமல் போயிருந்தது. அவன் முகம் சட்டென்று வாடியது. இவ்வளவு பிரகாசமான நிலாவை இனி பார்க்கும் வாய்ப்பு எப்போது கிடைக்குமோ என்ற ஏக்கத்தோடு வீட்டிற்குள் நுழைந்தான்.

கனவு கலைந்தது. அம்மா அருகே படுத்திருந்த ஏழு வயது சிறுவன் கல்கி கனவில் வந்த நிலவை உண்மையென்றே நம்பினான். கண்களை துடைத்துக்கொண்டு வாசலுக்குச் சென்று நிலாவை தேடினான். மாடிக்குச் சென்று தேடினான். காணவில்லை. நிஜமா இருந்திருந்தா எப்படி இருந்திருக்கும் என்று ஏங்கினான்.

அன்று ஞாயிறு என்பதால் அம்மா தாமதமாகவே எழுந்தார். எழுந்து குளித்து முடித்துவிட்டு கோயிலுக்கு கிளம்ப… “வீடு” படத்தின் பிஜிஎம் செல்போனில் ரிங்டோனாக ஒலித்தது. அழைப்பை ஏற்றார். அழைத்தது வானதி அத்தை. “ஊருக்கு வரேன்… நீங்க வீட்டுல தான இருக்கிங்க… இல்ல வெளிய கீது கிளம்புறிங்களானு கேட்கலாம்னு தான் போன் பண்ணேன்…” என்று அத்தை பேச “இல்ல… இல்ல எங்கயும் போகல நீங்க வாங்க…” என்று பதிலளித்தாள் மாதவி. “டேய் உங்க அத்தை வராங்களாம் டா…” என்று மாதவி சொல்ல, “ஐ அத்தை…” என்று மனதிற்குள் குஷியானான் கல்கி.

அத்தை வருவதற்கு முன்பு கோவிலுக்குச் சென்று வந்துவிடலாமென கல்கியை குளிக்க வைத்தார் அம்மா மாதவி. புதுத்துணி அணிந்துகொண்டு அம்மா மாதவியோடு கோவிலுக்கு கிளம்பினான் கல்கி. வீட்டிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் சொக்கநாதர் கோவிலுக்கு மாதவியின் ஸ்கூட்டி பயணித்தது. பின்னாடி அமர்ந்திருந்த கல்கி அம்மாவின் இடுப்பை கட்டிப்பிடித்தபடி வாகனத்தின் வேகத்திற்கேற்ப வந்த எதிர்க்காற்றை ரசித்தான்.

Representational Image

கோவிலுக்கு சென்று வீட்டிற்குத் திரும்பியதும் இட்லிகள் சாப்பிட்டுவிட்டு மதியத்திற்கு வெஜ் பிரியாணி செய்ய திட்டமிட்டு அதற்கான வேலைகளை செய்ய மெதுவாக ஆய்த்தமானார் அம்மா. கல்கி டீவி பார்த்துக் கொண்டும் செல்போனை நோண்டிக் கொண்டும் அத்தையின் கார் வந்துவிட்டதா என்று அடிக்கடி வாசலை போய் பார்த்துக்கொண்டும் இருந்தான். பதினோரு மணி அளவில் அத்தையின் கார் வந்து வாசலில் நின்றது. அத்தை மட்டும் தனியாக கார் ஓட்டிக்கொண்டு வந்திருந்தார். வாசலுக்கு குடுகுடுவென ஓடிச் சென்று அத்தையின் கார் அருகே நின்று “அத்த…” என்றான். “டேய் பட்டுக்குட்டி…” என்று சொல்லியபடியே அத்தை காருக்குள் இருந்து இறங்கி வந்தார். கூடவே இரண்டு கட்டப்பைகளும் எடுத்து வந்தார்.

அத்தை வீட்டுக்குள் வந்ததும் மாதவியிடம் பைகளை கொடுத்துவிட்டு சோபாவில் அமர்ந்து கல்கியை இழுத்து அவனை கொஞ்ச ஆரம்பித்தார். அத்தை என்றால் கல்கிக்கு அவ்வளவு பிடிக்கும். காலையில் தன் கனவில் வந்த நிலாவை போல அத்தைக்கு பிரகாசமான முகம். அத்தையிடம் சிறிது நேரம் விளையாடிக் கொண்டிருக்க மதியம் ஒருமணி அளவில் மாதவி “பிரியாணி ரெடி” என்று குக்கரை ஹாலுக்கு எடுத்து வந்தார். காலையில் இரண்டு இட்லி மட்டுமே சாப்பிட்டிருந்த கல்கி இப்போது அத்தையுடன் சேர்ந்து வயிறு நிரம்ப வெஜ் பிரியாணி சாப்பிட்டு முடித்தான். அந்தப் பிரியாணி வழக்கத்தை விட கூடுதல் சுவையாக இருந்தது. அத்தை வருகிறார் என்பதால் அம்மா பார்த்து பார்த்து சமைத்திருக்கிறார் என்பதை புரிந்துகொண்டான் கல்கி. “அத்த இனிமே நீங்க அடிக்கடி வீட்டுக்கு வாங்க… அப்பத்தான் இந்தளவுக்கு டேஸ்ட்டான பிரியாணி கிடைக்கும்…” என்று கல்கி சொல்ல அத்தை அவனது தலையை கோதிவிட்டார். அவனுக்கு தகப்பன் இல்லாத சோகம் அத்தையை கண்கலங்க வைத்தது.

Representational Image

மாதவி உட்பட மூவரும் வெஜ் பிரியாணி சாப்பிட்டு முடித்துவிட்டு ஹாலில் வந்து மூவரும் அரட்டை அடிக்க துவங்கினர். அத்தை வயிறு நிறைய உண்டதால் அவருக்கு தூக்கம் வருவது போலிருந்தது. “கல்கி குட்டி… அத்தைக்கு தூக்கம் வருது… மூன்றரை மணிக்கு எழுப்பி விடுடா…” என்று அத்தை பெட்டில் சாய்ந்து படுத்து உறங்கத் தொடங்கினார். அத்தை உறங்கிய அடுத்த சில நொடிகளில் பெட்டுக்கு மேலே இருக்கும் செல்ஃபில் உள்ள பழைய நோட்டு புத்தகங்களை எடுக்க பெட்டில் ஏறி கால்களை எக்கி எக்கி அந்தப் புத்தகங்களை எடுத்தான் கல்கி. அப்போது தவறுதலாக அவனது கால்கள் அத்தையின் வாயில் மீது மிதித்துவிட அத்தை வலி தாங்காமல் துடித்து எழுந்தார்.

“உஸ்… வாய தொலச்சிப்புட்டானே…” என்று தனது உதடுகளை தொட்டுப் பார்த்தார் அத்தை. மேல் உதடுகள் லேசாக கிழிந்து ரத்தம் வடிந்தது. உதட்டை மடித்து வாயிற்குள் திணித்து ரத்தத்தை விழுங்கிய அத்தை மீண்டும் உதடுகளை இயல்புநிலைக்கு கொண்டுவந்து “டேய்… வாலு பையலே… என் வாயில மிதிச்சு… என் உதட்ட தொலச்சிபுட்டேயாடா… இங்க பாரு உதடு கிழிஞ்சிருச்சு… கிழிஞ்சு போன உதட்ட வச்சு நான் என்ன செய்வேன்… ஒழுங்கா உன் உதட்ட எனக்கு கழட்டி கொடு…” என்றார் அத்தை. கல்கி எச்சிலை விழுங்கிக்கொண்டு அத்தையை திருதிருவென பார்த்தான். உண்மையிலயே அத்தையின் உதடுகள் லேசாக கிழிந்திருக்கிறது என்பது அவனுக்கு நன்றாகவே தெரிந்தது.

“ஸாரி அத்த… தெரியாம உங்க வாய மிதிச்சிட்டேன்…” என்று பம்மியபடி பதிலளித்தான் கல்கி.

“என்னடா ஸாரி… எனக்கு ஸாரியெல்லாம் வேண்டாம்… உன் உதடு தான் வேணும்… ஒழுங்கா கழட்டிக் கொடு…” என்று அத்தை மிரட்ட… அத்தை இதுக்கு முன்பு இப்படி மிரட்டலாக பேசியதில்லை என்பதை உணர்ந்து பயந்து போனான்.

“என்ன திருதிருனு முழிக்குற… ஒழுங்கா உன் உதட்ட கழட்டி கொடு… இல்லனா போலீஸ்ட்ட உன்ன புடிச்சுக் குடுத்துருவேன்…” என்று அத்தை மீண்டும் மிரட்ட… கல்கி அம்மாவை எட்டிப் பார்த்தான். அம்மா சோபாவில் படுத்து குறட்டை விட்டு உறங்கிக் கொண்டிருந்தார்.

அவன் மீண்டும் அத்தையை பார்க்க, அத்தை போனை எடுத்து காதில் வைத்து “ஹலோ… போலீசுங்களா… இங்க ஒருத்தன் என் உதடுகள கிழிச்சுட்டான் சார்… திருப்பி உன் உதட்ட கொடுடான்னு கேட்டா திருதிருன்னு முழிக்குறான்… அவன் பேரு கல்கி… சீக்கிரம் வந்து அவன பிடிச்சுட்டு போங்க… உங்ககிட்ட துப்பாக்கிலாம் இருக்குங்களா சார்… இருந்தா துப்பாக்கிலாம் எடுத்துட்டு வந்து இவன புடிச்சுட்டு போங்க… ரொம்ப குறும்புக்கார பையனா இருக்கான்… சீக்கிரம் வாங்க…” என்று பேசி முடித்து போனை கீழே வைத்தார் அத்தை.

அதை கண்கூட பார்த்த கல்கி இப்போது மிரண்டு போயிருந்தான். காலையில கனவுல வந்த நிலா மாதிரி இருக்குற அத்தையா இப்படி பேசுறது… என்று பதறினான். “இன்னும் ஒருமணி நேரத்துல போலீஸ் வரேன்னு சொல்லிருக்காங்க… அதுக்குள்ள உன் உதட்ட கொடுத்துட்டா நீ தப்பிச்சுக்குவ… இல்லனா போலீஸ்ட்ட பிடிச்சு கொடுத்துருவேன்…” என்று சொல்லிவிட்டு உதட்டில் தேங்கெண்ணை தடவிக்கொண்டு மீண்டும் படுத்து உறங்க தொடங்கினார் அத்தை.

Representational Image

கல்கிக்கு பதட்டமாகவே இருந்தது. “நம்ம உதட்ட அத்தைக்கு குடுத்துட்டா… நாம என்ன செய்யுறது… உதட்ட எப்படி கழட்டி கொடுக்க முடியும்… எதாவது ஆப்ரேசன் பண்ணி என் உதட்ட அத்தைக்கு கொடுக்க முடியுமா…” என்று மனதுக்குள் பேசத் தொடங்கியவன், “அப்படி உதட்ட குடுக்கலன்னா என்ன ஆகும்… அத்த வேற போலீஸ்ட்ட கம்ப்ளெய்ண்ட் பண்ணிருக்காங்களே… போலீஸ் வந்து பிடிச்சிட்டு போயிருமே… போலீஸ் நம்மள பிடிச்சுட்டு போனா என்ன ஆகும்… சினிமால காட்ற மாதிரி தலைகீழா தொங்கவிட்டு ஆளு மாத்தி ஆளு அடிச்சி பின்னியெடுத்துடுவாங்களே… அப்படியெல்லாம் அடிச்சா நான் அடி தாங்க மாட்டனே… அப்பிடி அடிச்சு முடிச்சுட்டு கடைசியா தலைல கருப்பு துணி போட்டு முகத்த மூடி தூக்குல தொங்க விடுவாங்க… அப்படி என்னையும் தூக்குல தொங்க விட்ருவாங்களே… நான் அப்படிபோயிட்டா என் பிரண்ட்ஸ்லாம் என்ன மிஸ் பண்ணுவாங்களே…இப்ப நான் என்ன செய்வேன் கடவுளே…” என்று மனதுக்குள் பேசி முடித்துவிட்டு மீண்டும் அத்தையை எட்டிப் பார்த்தான்.

அத்தை உறங்கிக் கொண்டிருந்தார். “இன்னும் கொஞ்ச நேரத்துல போலீஸ் வந்துடும்… போலீஸ் நம்மள பிடிச்சுட்டு போயி தலைகீழா தொங்கவிட்டு அடிச்சு கடைசியா தூக்குல தொங்கவிட போறாங்க…” என்று நினைத்தவன் சோபாவில் அம்மாவின் முதுகுக்கடியில் இருந்து கருப்பு துப்பட்டாவை எடுத்தான். அந்த துப்பட்டாவை தன் முகம் முழுக்க சுற்றிக்கொண்டு தன் இரண்டு கைகளால் தன் கழுத்தை நெறித்தான். இருமல் வந்தது. “நம்மள தூக்குல போட்றப்ப இப்படித்தான் கண்ணு கலங்கி இருமல் வரும்…” என்று உணர்ந்தவன் எச்சிலை விழுங்கிவிட்டு அத்தையிடம் சென்றான். அவனது காலடி சத்தத்தை கேட்டு மெதுவாக எழுந்து அமர்ந்தார் அத்தை.

Representational Image

மெத்தையில் அமர்ந்திருந்தபடி கால்களை தரையை நோக்கி தொங்கவிட்டிருந்த அத்தை, கல்கியை பார்த்து “இந்தா போலீஸ் வந்துட்டு இருக்காங்களாம்…” என்று முகத்தை சீரியஸாக வைத்து சொல்ல… கல்கி பட்டென உடைந்து அழுது அத்தையின் கால்களை பிடித்துக் கொண்டு “அத்த ஸாரி அத்த… தெரியாம உங்க உதட்ட மிதிச்சுட்டேன்… நீங்க வேணா என் உதட்ட ஆப்ரேசன் பண்ணி எடுத்துக்குங்க அத்த… போலீஸ்லாம் வேணாம் அத்த… போலீஸ் பிடிச்சுட்டு போனா கடைசில அவங்க என்னய தூக்குல போட்ருவாங்க அத்த…” என்று கதறி அழ, அதை சற்றும் எதிர்பாராத அத்தை ஒருகணம் அதிர்ந்து போனார். “போலீஸ் என்னய தூக்குல போட்ருவாங்க அத்த…” என்ற வார்த்தையை கேட்டதும் அத்தைக்கு தூக்கி வாரிப்போட்டது.

அத்தை ஆவணப்பட இயக்குனர். பல விருதுகள் வாங்கி இருக்கிறார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு செல்வராகவனின் “ஆயிரத்தில் ஒருவன்” படம் ரீரிலீஸ் செய்யப்பட்ட சமயத்தில் அதை தியேட்டரில் பார்த்தபோது அந்தப் படத்தில் சோழ மன்னன் பார்த்திபனுடைய மகனாக நடித்த சிறுவன் தன் கழுத்தருகே கத்தியை வைக்கும் காட்சியை பார்த்து கலங்கிப் போனார் அத்தை. அப்போது முதல் “வறுமை காரணமாக பெற்ற குழந்தைகளை கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்ட தாய்” என்ற தலைப்பில் வரும் செய்தி தகவல்களை சேகரித்துக் கொண்டிருக்கிறார். அப்படி ஒருமுறை வடமாநிலமொன்றில் நடந்த சம்பவத்தை கேட்டதும் அத்தை துடிதுடித்துப் போனார்.

***

வடமாநில சம்பவம்…

மூன்று பெண் குழந்தைகளை பெற்றெடுத்த இந்தி பேசும் ஒரு கூலித்தொழிலாளி கடுமையான பஞ்சம் தாங்காமல் தமிழகம் வந்து தங்கி சில ஆண்டுகள் உயிரை தக்க வைத்துக் கொள்வதற்கு தேவையான பணத்தை தன் குடும்பத்திற்கு அனுப்பி வந்தார். பிறகு தமிழகத்திலிருந்து திரும்பி சில மாதங்கள் பிள்ளைகளோடு வாழ்ந்துவிட்டு மீண்டும் தன் நண்பர்களோடு வேறு மாநிலம் நோக்கி பயணிக்க ஆரம்பித்தனர். வலசை போகும் பறவைகள் அணிஅணியாய் வானத்தில் பறக்க, அந்தப் பறவைகளின் நிழலை பின்தொடர்ந்தபடி கூட்டத்தோடு கூட்டமாக நடந்துசென்ற தன் அப்பாவை அந்த ஊர் மலை உச்சியிலிருந்து மூன்று சிறுமிகளும் பார்த்தனர். அதுதான் அவர்கள் அப்பாவை கடைசியாக பார்த்தது. அவர் போன நாளிலிருந்து குடும்பத்திற்கு பணம் எதுவும் அனுப்பவில்லை என்பதால் குடும்பம் வறுமையில் தவித்தது. தன் கணவர் இவ்வளவு நாள் பணமோ அதுகுறித்த கடிதமோ அனுப்பாமல் இருக்கிறார் என்றால் கண்டிப்பாக அவர் இறந்திருக்க கூடும் என்று முடிவெடுத்து தன் குழந்தைகளை கொன்றுவிட்டு தூக்கில் தொங்க முடிவெடுத்தார் அந்த தாய்.

அன்று குடியரசு தினம். காலை பொழுதில் பக்கத்து வீட்டில் உள்ள டிவியில் பிரதமர் கொடியேற்றி சிறப்புரை ஆற்றும் நிகழ்ச்சியை திரும்ப திரும்ப போட்டுக் காண்பித்துக் கொண்டிருந்தது ஒரு இந்தி சேனல்.

முதல்முறை தேசிய கொடியை ஏற்றியதை காட்டும்போது அந்த தாய் முதல் தூக்கு கயிறை கட்டினாள். இரண்டாம் முறை தேசிய கொடியை ஏற்றியதை காண்பிக்கும்போது இரண்டாவது தூக்கு கயிறை கட்டினாள். இப்படியே பக்கத்து வீட்டு டீவியில் தேசிய கொடி ஏற்றப்பட்டதை திரும்ப திரும்ப காண்பிக்க அந்த தாய் தனக்கும் சேர்த்து நான்கு தூக்கு கயிறுகளை கட்டியிருந்தாள். மூன்று பெண் குழந்தைகளும் அம்மா கட்டிய அந்த நான்கு கயிறுகளையும் வேடிக்கை பார்த்தனர். அப்போது மூத்த பெண் வந்து “அம்மா… நான் மட்டும் செத்து போறேன்மா… நான் செத்தா கொஞ்சம் குடும்ப சுமை குறையும்… அதுக்கப்புறம் நீ ரெண்டு தங்கச்சிகளையும் ஈஸியா காப்பாத்திடலாம்…” என்று சொன்னாள்.

இரண்டாவது பெண் குழந்தை “அம்மா அக்கா செத்ததுக்கு அப்புறம் என்னையும் தூக்குல போட்ரும்மா… தங்கச்சி ஒருத்தி மட்டும் இருந்தா அவ இன்னும் நல்லா வசதியா வாழ்வா…” என்று சொன்னாள். கடைக்குட்டி எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள்.

முதலில் மூத்த பெண் தூக்கில் தொங்கினாள். அடுத்ததாக இரண்டாவது பெண் தூக்கில் தொங்கினாள். அவர்கள் இருவரும் துடிதுடித்து இறந்ததை பார்த்த கடைக்குட்டி சிறிதும் பயமின்றி தனக்கான தூக்கு கயிறு அடியில் வந்து நின்றாள். இவ்வளவு நேரம் அமைதியாக இருந்த அந்த கடைக்குட்டி இப்போது “அம்மா கயிறு எட்டல… தூக்கி விடும்மா…” என்று சொன்னதும் தாயின் கண்களிலிருந்து பொளபொளவென கண்ணீர் வடிந்தது. மூன்று குழந்தைகளும் நாக்கை நீட்டியபடி தூக்கில் தொங்க கடைசியாக தனக்கான கயிற்றை நோக்கி வந்தாள் அந்த தாய். பக்கத்து வீட்டு டிவியில் “பாரத் மாதா கே ஜே…” என்று சொல்லி பிரதமர் உரையை முடிக்க, அதை கேட்டபடியே அந்தத் தாய் தூக்குக் கயிற்றில் தலையை நுழைத்து தொங்கினாள்.

**

இந்த சம்பவம் கல்கியின் அத்தை வானதியை ரொம்பவே பாதித்திருந்தது. 1948ம் ஆண்டு வெளியான “சம்சாரம்” படத்தில் தாய் தன் குழந்தைகளுக்கு பிச்சை எடுக்க “அம்மா பசிக்குதே… தாயே பசிக்குதே…” என்று பாட கற்றுக்கொடுப்பார். அந்தப் பாடல் அத்தையை ரொம்பவே பாதித்திருக்க “அம்மா பசிக்குதே” என்ற தலைப்பில் வறுமை காரணமாக குழந்தைகளை கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்ட தாய்கள் பற்றி ஆவணப்படம் எடுக்க ஆய்த்தமாகி கொண்டிருக்கிறார். அவருடைய சமீபத்திய பணிகள் இதை சார்ந்து தான் இருந்தது. இந்த பிரச்சினையை தனது “மயானத்தில் இடமில்லை” என்ற சிறுகதையில் பதிவுசெய்த எழுத்தாளர் இமையம் அவர்களை நேற்றிரவு சந்தித்து பேசிவிட்டுத்தான் இப்போது கல்கியின் வீட்டுக்கு வந்திருக்கிறார் அத்தை.

Representational Image

கல்கி சொன்ன வார்த்தைகள் தந்த அதிர்ச்சியிலிருந்த மீண்ட அத்தை, “ஐயோ தங்கமே உன்ன போயி போலீஸ்ல பிடிச்சு குடுப்பனா… நீ என் சாமிடா தங்கம்…” என்று சொல்லிவிட்டு கால்களை பிடித்திருந்த அவனை எழுப்பி அவனது உதட்டில் அழுத்தமாக முத்தமிட்டார்.

“உன் உதட்ட நான் எடுத்துக்கிட்டேன்… இனி எந்தப் பிரச்சினையும் இல்ல…” என்று சொல்லிவிட்டு போனை எடுத்து, “போலீசுங்களா… நீங்க கல்கி வீட்டுக்கு வர வேண்டாம்… அவன் எனக்கு அவனோட உதடுகள கொடுத்துட்டான்… அவன் ரொம்ப நல்ல பையன்…” என்று சொல்லிவிட்டு குழந்தைகளிடம் எதை சொல்லி மிரட்டுவது அப்படி மிரட்டினால் அவர்களது கற்பனை எந்தளவுக்குப் போகும் என்பதை உணர்ந்தபடி செல்லை கீழே வைத்தார் அத்தை.

கண்களை துடைத்துக்கொண்ட கல்கி “ஒருவழியா அத்தைக்கு நம்ம உதடுகள கொடுத்தாச்சு… இனி நம்மள போலீஸ் பிடிக்காது…” என்று நிம்மதியடைந்தான்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.