லக்னோ: உத்தரபிரதேசத்தில் கடந்த சில நாட்களாக இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. அந்த வகையில் நேற்று இடியுடன் கூடிய பெய்த மழையின் போது வெவ்வேறு இடங்களில் மின்னல் தாக்கிய சம்பவத்தில் குறைந்தது 14 பேர் பலியாகினர். மேலும் 16 பேர் படுகாயமடைந்தனர். மாநில நிவாரண ஆணையர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையின்படி, மின்னல் தாக்கிய சம்பவத்தில் பண்டாவில் நான்கு பேர், ஃபதேபூரில் இரண்டு பேர், பல்ராம்பூர், சந்தோலி, புலந்த்ஷாஹர், ரேபரேலி, அமேதி, கௌசாம்பி, சுல்தான்பூர் மற்றும் சித்ரகூட் மாவட்டங்களில் தலா ஒருவர் என 14 ேபர் உயிரிழந்துள்ளனர். அதனால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.