உத்தரபிரதேசத்தின் லக்னோ நகரைச் சேர்ந்தவர் 82 வயதாகும் கலீம் உல்லா கான். வெறும் 7ஆம் வகுப்பு மட்டுமே படித்த இவர், இந்தியாவின் மாபெரும் தோட்டக்கலை நிபுணராக இருக்கிறார் என்றால் உங்களால் நம்ப முடியுமா? ஆம், இவர்தான் இந்தியாவின் மாபெரும் `மா’மனிதர்! இவர் தோட்டக்கலையில் பயின்ற நுணுக்கங்கள் மூலம், ஒரு மாமரத்தில் 300க்கும் மேற்பட்ட மா வகைகளை விளைய வைத்திருக்கிறார். அந்த மரமும், சாதாரணமான மரமல்ல… 120 வயது பாரம்பரியமான மரம்!
ஆங்கிலத்தில் Grafting method என்று கூறப்படும், ஒரு செடியுடன் இன்னொரு செடியை இணைக்கும் தோட்டக்கலை வழிமுறையை இவர் தனது மாமரத்தில் முயற்சித்து இந்த சாதனையை நிகழ்த்தியிருக்கிறார். இவரது மாமரம் 30 அடி உயரத்துடன், தடிமனான தோற்றத்துடன், பல கிளைகளோடு நிழல் கொடுத்து கலீமை போலவே இத்தனை வயதிலும் தலை நிமிர்த்தி நிற்கிறது.
தன்னுடைய இந்த முயற்சிக்காக, கலீம் பல்வேறு விருதுகளை வாங்கியிருக்கிறார். அவற்றில் முக்கியமாக இந்திய அரசின் மரியாதைக்குரிய விருதான பத்மஸ்ரீ விருதை 2008ஆம் ஆண்டு பெற்றிருக்கிறார் கலீம். தோட்டக்கலைக்கு அவராற்றிய பங்குக்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இன்று பல விவசாயிகளும் உருவாக்காத மா வகைகளையும் இங்கு உற்பத்தி செய்கிறார் கலீம். இந்திய மா உற்பத்தியாளர்கள் அமைப்பின் ஒரு தரவுப்படி, இந்தியாவில் சுமார் 90 சதவிகித உள்ளூர் மா வகைகள் சுற்றுச்சூழல் மாற்றங்கள் காரணமாக முழுமையாக அழிந்துவிட்டன.
இதுகுறித்து கலீம் அளித்த ஒரு பேட்டியில், `இன்று பலரும் தரமில்லா பூச்சிக்கொல்லிகள், உரம் போன்றவற்றையெல்லாம் தங்கள் செடிகளுக்கு போடுகின்றனர். இதனால் பல அழிவுகள் ஏற்படுகின்றன. இப்படியானவர்களுக்கு தோட்டக்கலையின் நுணுக்கங்கள் பற்றி தெரிவதில்லை. அதுதான் எல்லா பிரச்னைக்கும் காரணம். அதை கற்றுக்கொண்டாலே, அனைத்தையும் சாதிக்கலாம்’ என்று கூறியுள்ளார்.
இந்த அற்புத மரத்தில் விளையும் 300க்கும் மேற்பட்ட மா வகைகளுக்கும், கலீமே பெயரும் வைப்பது கூடுதல் சுவாரஸ்யம். அப்படி இவர் தனது தோட்ட மாமரங்களுக்கு இதுவரை ஐஸ்வர்யா (நடிகை ஐஸ்வர்யா ராயை குறிப்பிட்டு), அனார்கலி, நரேந்திர மோடி, சச்சின் டெண்டுல்கர், சோனியா காந்தி, அகிலேஷ் யாதவ் என்றெல்லாம் பெயர் வைத்திருக்கிறார்.
இதுபற்றி பேசுகையில், “ஐஸ்வர்யா ரக மாங்காய், அவரை போலவே அழகானது… இந்த ரக மாங்காயில் ஒரு மாங்காய், ஒரு கிலோகிராமுக்கும் மேல் இருக்கும். கருஞ்சிவப்பு நிறத்தில், மிகச்சுவையாக இருக்கும். அனார்கலி வகை மாங்காயில், உள்ளே வெளியே என இரு தோல்பகுதிகள் இருக்கும்; போலவே இரண்டு பழத்தின் பகுதியும் இருக்கும்; இது வாசனையாக இருக்கும். இப்படி ஒவ்வொரு ரக மாங்காய்க்கும் ஒரு தனித்தன்மை இருக்கும். வாழ்க்கையில் மனிதர்கள் வருவார்கள் போவார்கள். ஆனால் இந்த மா வகைகள் என்றென்றும் நிலைத்திருக்கும். வருடங்கள் கடந்தும்கூட, இந்த மாங்காய்கள் இந்த செலிபிரிட்டிகளின் பெயரை சொல்லி, அவர்களின் சாதனைகளை சொல்லும்” என்றிருக்கிறார் கலீம்.
“வெறும் கண்களால் பார்ப்பவர்களுக்குதான் இது சாதாரண மாமரம். அறிவுக்கண் கொண்டு பார்த்தால், இது ஒரு மரம் மட்டுமே ஒரு பழத்தோட்டம்; உலகின் மிகப்பெரிய மாமர கல்லூரியே இதுதான்!” என்கிறார் கலீம்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM