உத்தரப்பிரதேசத்தில் கடந்த சில தினங்களாக இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மின்னல் தாக்கி 14 பேர் உயிரிழந்திருப்பதாகவும், சுமார் 16 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் அரசு தரப்பில் தகவல் வெளியாகியிருக்கிறது.
இது தொடர்பாக மாநில அரசு, “உத்தரப்பிரதேசத்தின் பண்டாவில் 4 பேரும், பதேபூரில் 2 பேரும், பல்ராம்பூர், சந்தோலி, புலந்த்ஷாஹர், ரேபரேலி, அமேதி, கௌசாம்பி, சுல்தான்பூர், சித்ரகூட் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் என மொத்தம் 14 பேர் மின்னல் தாக்கி உயிரிழந்திருக்கின்றனர்” என செய்திக்குறிப்பு வெளியிட்டிருக்கிறது.
மின்னல் தாக்கி 14 பேர் இறந்தது தொடர்பாக இரங்கல் தெரிவித்திருக்கும் முதல்வர் யோகி ஆதித்யநாத், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார். மேலும், காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதிசெய்யவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறார்.