பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விஜய் தேவரகொண்டாவின் ‘லைகர்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது.
பூரி ஜெகந்நாத் இயக்கத்தில், விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘லைகர்’. பான் இந்தியா படமாக உருவாகி வரும் இந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டா குத்துச் சண்டை வீரராக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக அனன்யா பாண்டே நடிக்கிறார். மேலும் ரம்யா கிருஷ்ணன், ரோனித் ராய், மகரந்த் தேஷ்பாண்டே, ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் பிரபல குத்துத் சண்டை வீரர் மைக் டைசன் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.
சுனில் காஷ்யப் இசையமைத்துள்ளார். விஷ்ணு சர்மா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜூனைத் சித்திக் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். கரண் ஜோகர், பூரி ஜெகந்நாத், சார்மி கவுர் ஆகியோர் தயாரித்துள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வருகிற ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
இதில் திக்கி திக்கி பேசும் திறனுடையவராக இருந்தாலும் குத்துச்சண்டையில் கலக்கும் வீரராக விஜய் தேவரகொண்டா நடித்துள்ளது தெரிகிறது. அதேபோல், லயனுக்கும், டைகருக்கும் பிறந்தவன் என் மகன் என்று ரம்யா கிருஷ்ணன் பேசும் வசனங்கள், ‘பாகுபலி’ படத்தில் சிவகாமி கதாபாத்திரத்திற்குப் பிறகு தைரியமான தாயாக காட்டப்பட்டிருப்பதாக ரசிகர்கள் கூறிவருகின்றனர்.
More than @TheDeverakonda I am waiting for #RamyaKrishna gari role in #Liger pic.twitter.com/X40jAs8x5C
— Madhav Jaswanth (@whatmadhav) July 21, 2022
குறிப்பாக விஜய் தேவரகொண்டாவைவிட ரம்யா கிருஷ்ணனை காண ஆவலாக இருப்பதாக இணையவாசிகள் தெரிவித்துள்ளனர். இதேபோல், ரோனித் ராய், விஜய் தேவரகொண்டாவின் பயிற்சியாளராக நடித்துள்ளார். படத்தின் பின்னணி இசை மிரட்டலாக இருக்கிறது.