என்னுடைய சகோதரியே இந்தியாவின் அடுத்த ஜனாதிபதியாக வருவார்: திரவுபதி முர்முவின் சகோதரர் தாரினிசென் துடு

புவனேஷ்வர்,

ஜனாதிபதி தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் இன்று எண்ணப்படுகின்றன. நாட்டின் 15-வது ஜனாதிபதி யார்? என்ற விவரம் இன்றை தினம், மாலைக்குள் வெளியாகும் என தேர்தல் கமிஷன் வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

திரவுபதி முர்முவே அடுத்த ஜனாதிபதி ஆகும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அவ்வாறு அவர் வெற்றி பெற்றால் நாட்டின் முதல் பழங்குடியின ஜனாதிபதி என்ற சிறப்பை அவர் பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய திரவுபதி முர்முவின் சகோதரர் தாரினிசென் துடு கூறுகையில், “இங்கு மகிழ்ச்சியான சூழல் நிலவுகிறது.

திரவுபதி முர்மு இந்தியாவின் அடுத்த ஜனாதிபதியாக வருவார் என்று நாங்கள் நம்புகிறோம். இது பழங்குடி சமூகம், ஒடிசா மற்றும் நாட்டிற்கு பெருமை சேர்க்கும் விஷயம் ஆகும்” என்று தெரிவித்தார்.

கடந்த 18-ந்தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி காலை 11 மணிக்கு தொடங்கும்.

பலத்த பாதுகாப்புடன் நடைபெறும் இந்த வாக்கு எண்ணிக்கையில், முதலில் எம்.பி.க்களின் வாக்குகள் எண்ணப்படுகின்றன. இந்த சுற்று முடிவடைந்ததும் வேட்பாளர்களின் முன்னணி நிலவரம் வெளியிடப்படும்.

பின்னர் ஆங்கில எழுத்து அகர வரிசைப்படி மாநிலங்களின் வாக்குப்பெட்டிகள் திறந்து எண்ணப்படும். இதில் முதல் 10 மாநிலங்களின் வாக்குகள் எண்ணப்பட்டதும், 2-வது முறையாக வேட்பாளர்களின் முன்னணி நிலவரம் வெளியிடப்படும்.

தொடர்ந்து 20 மாநிலங்கள் முடித்த பின் ஒரு முறையும், பின்னர் மீதமுள்ள வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்ட பின் இறுதி நிலவரத்தையும், தேர்தல் நடத்தும் அதிகாரி பி.சி.மோடி வெளியிடுவார் என அறிவிக்கப்பட்டு உள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.