ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக நேற்று பாராளுமன்றத்தில் நடைபெற்ற தேர்தலின் போது தமது கட்சியால் முன்நிறுத்தப்பட்ட வேட்பாளர் தோல்வியுற்றார் என்று முன்னாள் ஜனாதிபதி, மஹிந்த ராஜபக்க்ஷ தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு முடிவடைந்த பின்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்தை விட்டு வெளியேறும் போது ,ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
“நாங்கள் டலஸை எமது கட்சியின் வேட்பாளராக முன்னிறுத்தினோம். நாம் அவருக்கு வாக்களித்தோம். அவர் தோல்வியுற்றார். யாராவது வெற்றி பெற வேண்டும் அல்லவா!”
“ரணில் விக்ரமசிங்கவிற்கு அதிக வாக்குகள் கிடைத்தன. அவர் ஜனாதிபதியானார். அதுதான் நடந்தது. எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று நாம் காத்திருக்கிறோம். எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் அவர்கள் மக்களுக்காக உழைக்க வேண்டும்”
ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தைக் கூறுகின்றனர் . சிலர் கூறுகின்றனர் இது மக்கள் வாக்கெடுப்பு அல்ல என்று. நாங்கள் கூறுகின்றோம் இதுதான் மக்களின் வாக்கெடுப்பு”
“இப்போது போராட்டம் நடத்தியது போதும் என்று நான் நினைக்கிறேன். காலிமுகத்திடலில் போராடும் இளைஞர்கள் இப்போதாவது புரிந்து கொள்ள வேண்டும். வெளியே சென்று வேலை செய்ய வேண்டும்.” என்றும் அவர் கூறினார்.
ஊடகவியலாளர் – நீங்கள் திரு.ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாக்களித்தீர்களா?
மஹிந்த ராஜபக்ஷ – “இல்லை.. இல்லை.”
ஊடகவியலாளர் – எதிர்காலத்தில் அரசாங்கத்தை அமைப்பதற்கு உங்கள் தரப்பிலிருந்து ஏதேனும் தலையீடு இருக்குமா?
மஹிந்த ராஜபக்ஷ – “நாம் இன்னும் அவ்வாறானதொரு தீர்மானத்தை எடுக்கவில்லை. கட்சி எடுக்கும் எந்த முடிவையும் நான் ஏற்றுக்கொள்கிறேன் என்று அவர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.