ஐநா நிர்ணயித்த இலக்கை விட மகப்பேறு இறப்புகள் இந்தியாவில் அதிகரிப்பு: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

புதுடெல்லி, : ஐநா நிர்ணயித்த இலக்கை விட இந்தியாவில் 70 மாவட்டங்களில் மகப்பேறு இறப்பு விகிதம் அதிகளவில் இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.பேறுகாலத்தில் தாய்மார்களின் இறப்பு விகிதம் (எம்எம்ஆர்) என்பது, உலகெங்கிலும் உள்ள நாடுகளில் பிரசவத்திற்கு முன்னும், பின்னும் தாய்மார்களின் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பையும் மேம்படுத்துவதற்கான கொள்கைகளை வகுப்பதற்கான செயல்திறனாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில், இந்தியாவில் மாவட்ட அளவிலான மகப்பேறு இறப்புகள் குறித்த ஆய்வறிக்கை முதல் முறையாக வெளியாகி உள்ளது. ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் சுகாதார மேலாண்மை தகவல் அமைப்பில் (எச்எம்ஐஎஸ்) பதிவு செய்யப்பட்ட 6.2 கோடி குழந்தை பிறப்புகள் மற்றும் 61,169 மகப்பேறு இறப்புகளைக் கொண்டு ஆய்வாளர்கள் ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.அதில், ஐநா நிர்ணயித்த இலக்கைக் காட்டிலும், இந்தியாவில் 70 மாவட்டங்களில் மகப்பேறு இறப்பு எண்ணிக்கை அதிகளவில் இருப்பதாக தெரியவந்துள்ளது. இது குறித்து ஆய்வாளர்கள் கூறுகையில், ‘‘மொத்தம் 640 மாவட்டங்கள் கணக்கெடுப்பில் எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில் 448 மாவட்டங்களில் மகப்பேறு இறப்பு, 1 லட்சம் குழந்தை பிறப்பில் 70க்கும் அதிகமாக இறப்பு உள்ளது. 2030ம் ஆண்டிற்கான ஐநா நிர்ணயித்துள்ள இலக்கு எழுபதாகும்,’’ என்றனர். அதிகபட்சமாக அருணாச்சல பிரதேசத்தில் 1 லட்சம் குழந்தை பிறப்புகளில் 284 தாய்மார்கள் மரணம் அடைந்துள்ளனர். குறைந்தபட்சமாக மகாராஷ்டிராவில் 40 மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இந்தியாவில் மகப்பேறு இறப்பு ஆண்டுக்கு சராசரியாக 4.5 சதவீதம் சரிந்து வந்தாலும், இது ஐநா நிர்ணயித்த ஆண்டு இலக்கு விகிதம் 5.5 சதவீதத்தை விட குறைவாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக் காட்டி உள்ளனர். அருணாச்சலத்தை தொடர்ந்து மணிப்பூர் (282), அந்தாமான் நிக்கோபர் தீவு (275), மேகாலயா (266), சிக்கிம் (228) ஆகிய மாநிலங்கள் மகப்பேறு இறப்பு விகிதம் 210ஐ விட அதிகமான பிரிவில் இடம் பெற்றுள்ளன. இந்த மாவட்டங்களில் ஐநாவின் இலக்கை அடைவதற்கு உடனடி நடவடிக்கையைத் தொடங்க வேண்டும் என்றும், இதன் மூலம் சாத்தியமான தாய்மார்களின் இறப்புகளை தடுக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.