திருவனந்தபுரம் :’கேரளாவில், ஆணும் – பெண்ணும் ஒன்றாக அமர எந்த தடையும் இல்லை. இன்னும் பழங்கால சிந்தனையில் ஊறித் திளைப்பவர்கள் மட்டுமே அப்படி நினைக்கின்றனர்’ என, திருவனந்தபுரம் மேயர் ஆர்யா ராஜேந்திரன் தெரிவித்தார். கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ.,வைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.
இங்கு, திருவனந்தபுரம்பொறியியல் கல்லுாரி அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில், பயணியர் அமர நீளமான இரும்பு ‘பெஞ்ச்’ இருந்தது. சமீபத்தில் இந்த பெஞ்ச் இடைவெளி விட்டு மூன்று தனித்தனி இருக்கைகளாக வெட்டப்பட்டன. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொறியியல் கல்லுாரி மாணவர்கள், அந்த பெஞ்சை படம் பிடித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர்.
அதில், ‘பொறியியல் கல்லுாரி மாணவ – மாணவியர் இந்த பஸ் நிறுத்த பெஞ்சில் ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டிருப்பர். இது பிடிக்காத பழமையான சிந்தனை கொண்டவர்கள் இந்த காரியத்தை செய்துள்ளனர்’ என, குறிப்பிட்டனர்.
இந்த பதிவை பார்த்த திருவனந்தபுரம் பெண் மேயர் ஆர்யா ராஜேந்திரன், அந்த பஸ் நிறுத்தத்தை நேற்று நேரில் வந்து பார்த்தார். அதன் பின் அவர் வெளியிட்ட அறிக்கை:
பஸ் நிறுத்தத்தில் உள்ள பெஞ்ச் மூன்றாக பிரிக்கப்பட்டு இருப்பது பொருத்தமற்ற செயல் மட்டுமின்றி, கேரளா போன்ற முற்போக்கு சிந்தனை உடைய சமூகத்தில் செய்ய தகுதி
யற்ற செயலாகவும் உள்ளது.
கேரளாவில் ஆணும், பெண்ணும் ஒன்றாக அமர எந்த தடையும் இல்லை. இன்னும் பழங்கால சிந்தனையிலேயே ஊறித் திளைப்பவர்கள் மட்டுமே அப்படி நினைக்கின்றனர்.
காலம் மாறிவிட்டது என்பதை புரிந்து கொள்ளாதவர்களை பார்த்து பரிதாபப்படுவதை தவிர வேறு வழியில்லை.பாழடைந்த இந்த பஸ் நிறுத்தம், பொதுப்பணித் துறையின் அனுமதி இன்றி கட்டப்பட்டுள்ளது. அதன் அருகிலேயே நவீன வசதியுடன் கூடிய புதிய பஸ் நிறுத்தத்தை, மாநகராட்சி விரைவில் கட்டித் தரும்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement