ஈரோடு 16 வயது சிறுமியின் கருமுட்டை சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட விவாகரத்தில் சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளை மூட தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவையடுத்து, முதற்கட்டமாக அந்த மருத்துவமனைகளில் உள்ள ஸ்கேன் மையங்களுக்குச் சீல் வைக்கப்பட்டது. மேலும், மருத்துவமனைகளில் புதிய நோயாளிகளைச் சேர்க்கக் கூடாது என்றும், தற்போது சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளை 15 நாள்களில் டிஸ்சார்ஜ் செய்யவேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இந்த நடவடிக்கையை எதிர்த்து சுதா மருத்துவமனை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கானது இன்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தது. “சட்டப்படி அரசு சார்பில் எந்த உரிய நோட்டீஸ் கொடுத்து விளக்கமும் பெறப்படாமல் சீல் வைக்கப்பட்டிருக்கிறது. எங்களுக்கு எதிரான பொய்யான புகாரின் அடிப்படையிலே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இதுவரை எங்கள் மருத்துவமனையின் மீது எந்த புகாரும் கிடையாது. இது திட்டமிட்ட மோசடி” என்று மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதையடுத்து தமிழ்நாடு அரசு சார்பில், “சிறுமியின் வயதை மாற்றி கருமுட்டை எடுத்தவுடன், நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுத்தால் ஆதாரங்கள் அழிக்கக் கூடும். இந்த காரணத்தினால்தான், நோட்டீஸ் அனுப்பாமல் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறிச் செயல்பட்ட மருத்துவமனையின்மீது பொதுமக்களின் நலன் கருதியே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது” என்று விளக்கமளிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, “கடந்த 35 ஆண்டுகளாகச் சுதா மருத்துவமனை செயல்பட்டுவருகிறது. இந்த மருத்துவமனையின்மீது முந்தைய காலகட்டத்தில் எந்த புகாரும் கிடையாது. கருமுட்டை விற்பனை விவகாரத்தில் மருத்துவமனை தரப்பில் விளக்கமளிக்க உரிய அவகாசம் வழங்காமல் நடவடிக்கை எடுத்திருப்பது தவறு. வைக்கப்பட்ட சீலை உடனடியாக அகற்ற வேண்டும். மேலும், புதிதாக நோயாளிகள் சேர்க்க விதிக்கப்பட்டிருக்கும் தடையையும் ரத்து செய்ய வேண்டும்” என உத்தரவு பிறப்பித்தார். மேலும், இந்த வழக்கு தொடர்பான விசாரணையை 12 வாரங்களுக்குள் நடத்தி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.