குடியரசுத் தலைவர் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றிருக்கிறார், பாஜக கூட்டணி வேட்பாளரும், பழங்குடியினத்தைச் சேர்ந்தவருமான திரவுபதி முர்மு.
நாட்டின் 15-வது குடியரசுத் தலைவராக பதவியேற்கும் 64 வயதாகும் திரவுபதி, ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள மிகவும் பின்தங்கிய கிராமத்தில் பழங்குடியினக் குடும்பத்தில் பிறந்தவர். சமூகப் புறக்கணிப்பும் வறுமையும் சூழ வளர்ந்தவர்.
கல்லூரிப் படிப்பை முடித்ததும் பள்ளியொன்றில் ஆசிரியராகப் பணியாற்றினார். பிற்படுத்தப்பட்ட, பழங்குடியினக் குழந்தைகளுக்குக் கல்வி அவசியம் என உணர்ந்தவர், அந்தப் பள்ளியில் ஊதியமின்றிப் பணியாற்றினார். பிறகு ஒடிசா அரசாங்கத்தில் இளநிலை உதவியாளராகப் பணியாற்றினார்.
1997-இல் பாஜகவில் இணைந்ததன் மூலம் திரவுபதி முர்முவின் அரசியல் பயணம் தொடங்கியது. அதே ஆண்டு ராய்ரங்கபூர் நகர் கவுன்சிலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பாஜகவின் பழங்குடியினப் பிரிவின் துணைத் தலைவராகப் பொறுப்பேற்றார். படிப்படியாக உயர்ந்து சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு இரு முறை வென்றார்.
பாஜக – பிஜு ஜனதா தளக் கூட்டணி ஆட்சியின்போது வணிகம் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சராகவும், மீன்வளம் – கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.
திரவுபதி முர்மு 2015-இல் ஜார்க்கண்டின் ஆளுநராக நியமிக்கப்பட்டதையடுத்து, அந்த மாநிலத்தின் முதல் பெண் ஆளுநர் என்கிற பெருமையைப் பெற்றார்.
தற்போது குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று, இந்தியாவின் முதல் பழங்குடியினப் பெண் குடியரசுத் தலைவர் என்கிற வரலாற்றுப் பெருமைக்கு திரவுபதி சொந்தக்காரர் ஆகியுள்ளார்.
பிரதீபா பாட்டீலைத் தொடர்ந்து இந்தியாவின் இரண்டாம் பெண் குடியரசுத் தலைவர் என்கிற பெருமையையும் இவர் பெறுகிறார்.
பொதுவாகக் குடியரசுத் தலைவர் தேர்தலில் ஒடுக்கப்பட்ட சமூகத்தினரையும், பெண்களையும் வேட்பாளராக நிறுத்துவது வெற்றி பெறுவதற்கான அரசியல் தந்திரம் என்கிற விமர்சனம் பரவலாக எழுந்துள்ளது. முற்போக்குக் கூட்டணி என்று சொல்லிக்கொள்ளும் எதிர்க்கட்சியினர் அதைக்கூடச் செய்யவில்லையே என்கிற விமர்சனத்தையும் பார்க்க முடிகிறது.
மத அடிப்படைவாதக் கொள்கையைக் கடைப்பிடிப்பதாக விமர்சிக்கப்படும் பாஜகதான், பழங்குடியினத்தைச் சேர்ந்தவரைக் குறிப்பாகப் பெண் ஒருவரைக் குடியரசுத் தலைவர் வேட்பாளராக வெற்றி பெறவைத்திருக்கிறது என்பது ஆட்சி அதிகாரத்தில் விளிம்பு நிலை மக்களுக்கும் பெண்களுக்கும் பெரும்பாலான கட்சிகள் எந்த அளவுக்கு முக்கியத்துவம் தருகின்றன என்பதை உணர்த்துகிறது.
தவிர, பெண் என்பதாலேயே ஒருவரை ஆதரித்துத்தான் ஆக வேண்டும் என்பதில்லை என்பதைச் சமூக வலைதளங்களில் திரவுபதி முர்மு குறித்து வெளியாகும் விமர்சனங்கள் மூலம் புரிந்துகொள்ள முடிகிறது.
திரவுபதி ஜார்க்கண்ட் ஆளுநராக இருந்தபோது நிலக்கரிச் சுரங்கத்துக்காகப் பழங்குடியிடினரின் நிலம் கையகப்படுத்தப்பட்டதையும் பழங்குடியினருக்கு எதிரான மதமாற்றத் தடைச்சட்டம் நிறைவேற்றப்பட்டதையும் குறித்து எதிர்க்கட்சியினர் விமர்சிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.
இருந்த போதும் திரவுபதி போன்றவர்கள் நாட்டின் மிக உயரிய பொறுப்புக்கு வருவது, பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்யும் என்பதில் ஐயமில்லை.